வைகுண்டராஜனின் மணல் குவாரி ரெய்டுதான் கலெக்டர் மாற்றத்திற்கு காரணமா?...
தூத்துக்குடி: வி.வி மினரல்ஸ் வைகுண்டராஜனின் மணல் குவாரிகளில் சோதனை நடத்தியதே கலெக்டர் ஆஷிஷ்குமார் அதிரடி மாற்றத்திற்குக் காரணம் என கூறப்படுகிறது.
மணல் மாஃபியாக்களின் மீது நடவடிக்கை எடுத்த சப் கலெக்டரை உத்தரபிரதேசமாநில அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம்போல தமிழகத்திலும் நடைபெற்றுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரங்களில் கிடைக்கும் தாது மணலை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழில் செய்து வரும் வி.வி.மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்டராஜனுக்கு அரசியல் புள்ளிகள் மற்றும் சில அதிகாரிகள் மட்டத்தில் ஆதரவு பலமாக உள்ளது.
கலெக்டர் நடவடிக்கை
வைகுண்டராஜனின் நிறுவனம் அண்மை காலமாக மணல் எடுப்பதில் விதி மீறல் செய்வதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ்குமாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் குழு நேற்று அதிரடியாக அவரது மணல் குவாரிகளில் சோதனை நடத்தியது.
மணல்குவாரி சோதனை
வைகுண்டராஜனுக்கு சொந்தமான தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் அருகில் உள்ள கலைஞானபுரம், வேம்பார் அருகே பெரியசாமிபுரத்திலுள்ள மணல் குவாரிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, விதி மீறல் எதுவும் இருக்கிறதா? என இந்த குழு ஆய்வு செய்தது.
தங்களது ஆய்வறிக்கையை இந்த குழுவினர் கலெக்டர் ஆஷிஸ்குமாரிடம் இன்று அளிக்க இருந்தனர் இந்த நிலையில், நேற்று இரவோடு இரவாக அவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
மணல்குவாரி சோதனை
ஆஷிஷ்குமார் கடந்த 2 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பதவி வகித்துள்ளார். கலெக்டரின் அதிரடி நடவடிக்கைக்கு மீனவர்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்த நிலையில் அவருடைய டிரான்ஸ்பருக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பணியிட மாற்றத்துக்கு, வைகுண்டராஜனின் மணல் குவாரிகளில் சோதனை நடத்தியதே காரணம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நேர்மையான அதிகாரிகள்
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேட்டினை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்த கலெக்டர் சகாயம், அன்சுல் மிஸ்ரா போன்ற நேர்மையான அதிகாரிகள் திடீரென்று டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இதேபோல தற்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டுள்ளது அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
200 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
கடந்த 20 ஆண்டுகளாகவே நேர்மையாக பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் சஸ்பென்ட் அல்லது அதிரடி மாற்றத்திற்கு ஆளாகியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி.












Click it and Unblock the Notifications