Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெட்ராஸ் கஃபே படத்தை தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்: வைகோ

Subscribe to Oneindia Tamil

MDMK will not allow Madras Cafe screening, says Vaiko
சென்னை: மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடப்போவதாக வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, சிங்கள அரசு பல முனைகளிலும் தனது அக்கிரமச் செயலை முடுக்கி விட்டு உள்ளது.

எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்தே ஈழத்தமிழருக்கு வஞ்சகமும், துரோகமும் செய்த இந்தியாவின் காங்கிரஸ் தலைமை, 2004 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைத் தன் தலைமையில் அமைத்த நாளில் இருந்து, விடுதலைப்புலிகளை அழிக்க, சிங்கள அரசோடு இணைந்து செயல்பட்டது. முப்படைத் தளவாடங்களையும் தந்தது; யுத்தத்தை முழுக்க முழுக்க இயக்கியது. அந்த முயற்சியில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்தனர். ஈழத்தமிழர் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதான் இந்திய அரசு.

அதனால்தான் உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவவும், சிங்கள அரசைப் பாதுகாக்கவும் திட்டமிட்டு, தற்போது காமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறது. இதயங்களில் இரத்தத்தைக் கொட்டச் செய்யும், தமிழ் இனக்கொலைக் காட்சிகளை, சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டபோதுதான் நடந்த கொடூரம் உலகுக்குத் தெரிந்தது. குறிப்பாக, எட்டு ஈழத் தமிழ் இளைஞர்கள் அம்மணமாக, கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியும், இசைப்பிரியா மிகக் கொடூரமாக இராணுவத்தால் கொல்லப்பட்ட காட்சியும், மனித மனங்களை உலுக்கின.

ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசும், செய்த துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்திய அரசும், திட்டமிட்டு, இந்தியாவில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தைப் பயன்படுத்தித் தயாரித்த படம்தான் மெட்ராஸ் கஃபே எனும் திரைப்படம் ஆகும்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ளவனுமான, கேரளத்தைச் சேர்ந்த ஜான் ஆபிரகாம், ரகசியமாக கொடியவன் மகிந்த ராஜபக்சேயை, இருமுறை சந்தித்து உள்ளான். இலங்கையிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு, தற்போது, இல்லை என்று மறுக்கவும் செய்கிறான். இந்தப் படத்தை, சூஜித் சர்கார் என்பவன் இயக்கி உள்ளான். 1987 இல், இந்திய அமைதிப்படை, இலங்கைக்குச் சென்றதைப் பின்புலமாகச் சித்தரித்து, இப்படத்தை எடுத்து உள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைக் கொடூரமானவர்களாகவும், இந்திய இராணுவத்தினர் பலரை அவர்கள் கொன்றதாகவும், அமைதிப்படை இந்தியா திரும்பிய பின்னர், இந்தியாவின் உளவு நிறுவனமான ரா அமைப்பின் அதிகாரியாக, கேரளத்தைச் சேர்ந்தவனாக, இலங்கைக்கு படத்தின் கதாநாயகன் ஜான் ஆபிரகாம் சென்று, அங்கு உள்ள நிலைமையை அறிவதாகவும், பின்னர் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதாகவும், இப்படம் சித்தரிக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை, பாஸ்கரன் என்ற பெயரில், படத்தில் ஒரு பாத்திரமாக்கி, ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதே, அன்றைய ராஜீவ் காந்தி அரசு, ஈழத்தமிழர்களுக்குச் செய்த மன்னிக்க முடியாத, துரோகம் ஆகும். நயவஞ்சகமாகப் பொய் சொல்லி, தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு வந்து, அவரது விருப்பத்துக்கு எதிராக, கட்டாயப்படுத்தித் திணித்த ஒப்பந்தம்தான் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்பதை, ஆகஸ்ட் 4 ஆம் நாள் சுதுமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

‘பிரபாகரன் தலைக்குப் பத்து இலட்சம் பரிசு' என்று இந்திய இராணுவ அமைச்சர் கே.சி.பந்த் அருகில் இருக்க, ஜெயவர்த்தனா அறிவித்தான். தியாக தீபம் திலீபன், துளி நீரும் பருகாமல் உயிர்ப்பலி ஆனதற்கும் இந்திய அரசே காரணம். குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட, 12 புலிப்படைத் தளபதிகள், நச்சுக்குப்பி கடித்து மடிவதற்கும், இந்திய அரசே காரணம்.

1987 அக்டோபரில், பிரபாகரனைக் கொலை செய்ய, இந்திய இராணுவ கமாண்டோக்களை ஏவினர். புலிகளின் செய்தித்தாள் அலுவலகங்கள், தொலைக்காட்சி அலுவலகத்தை, இந்திய இராணுவம் தாக்கி அழித்தது. எண்ணற்ற தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தனர். யாழ்ப்பாண மருத்துவமனையின் மீது குண்டுகளை வீசினர். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தனர்.

‘தமிழர்களின் சடலங்கள், சாலை ஓரங்களில் கிடக்கின்றன; நாய் நரிகளும், காக்கை கழுகுகளும் தின்னுகின்றன' என்று, லண்டனில் இருந்து வெளியாகின்ற கார்டியன் பத்திரிகை தெரிவித்தது.

இந்திய இராணுவத்தின் இக்கோரத் தாண்டவத்தைப் பற்றி, ஒரு வினாடி காட்சி கூட இத்திரைப்படத்தில் கிடையாது. இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா (சுஹறு), பிரபாகரனைக் கொலை செய்யப் பலமுறை திட்டமிட்டது. அதற்காக, மாத்தையா, கிருபன் போன்ற துரோகிகளைப் பயன்படுத்தியது.

போரை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தைக்குத் தான் தயார் என்றும், பிரபாகரன் அவர்கள், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய எட்டுக் கடிதங்கள் எழுதியும், அவற்றை ராஜீவ் காந்தி குப்பைத் தொட்டியில் போட்டார். இந்திய உளவு நிறுவனம் ரா , விடுதலைப்புலிகளின் முன்னாள் யாழ் தளபதி ஜானியை, சென்னையில் இருந்து வன்னிக்காடுகளுக்கு அருகில் சேர்த்து, பிரபாகரனைச் சந்தித்து வருமாறு அனுப்பி வைத்தது. அவர் திரும்பி வருகையில், இந்திய இராணுவமே அவரைச் சுட்டுக் கொன்றது. இப்படி ஒரு துரோகத்தை உலகில் எந்த நாடும் செய்தது இல்லை. 1992 யாழ்ப்பாணத் தளபதி கிட்டுவை, இந்தியக் கடல் எல்லையில் இருந்து பலநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால், பன்னாட்டுக் கடல் பரப்பில், இந்தியக் கடற்படை முற்றுகை இட்டுத் தாக்கிக் கொன்றது.

இந்திய இராணுவம் ஈழத்தில் இழைத்த கொடுமைகளை, மனதில் ஆறாத இரணமாகிப் போன ஈழத்தமிழர் துயரத்தை, இந்திய அரசின் துரோகத்தை, நான் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் முன்னிலையிலேயே, நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டாகப் பதிவு செய்து இருக்கிறேன்.

2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சோனியா காந்தி இயக்குகின்ற காங்கிரÞ தலைமையிலான மத்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பெருந்துரோகத்தால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த துரோகத்தை மறைக்கவும், கொடியவன் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து உதவவும், இலங்கை-இந்திய அரசுகளின் திட்டமிட்ட ஏற்பாடுதான், ஜான் ஆபிரகாமின் மெட்ராஸ் கஃபே திரைப்படம் ஆகும்.

என்ன கொழுப்பு இருந்தால், நம்மை யார் என்ன கேட்க முடியும் என்ற திமிர் இருந்தால், படத்துக்கு ‘மெட்ராஸ் கஃபே' என்று பெயர் சூட்டுவான்?

ஈழத்தமிழர்களுக்குப் பெருங்கேடு செய்த ஜே.என். தீட்சித், இந்திய அரசின் துரோகத்துக்குக் ஆலோசனைகள் கூறிய எம்.கே. நாராயணன், சிவசங்கர மேனன், கொடியவன் ராஜபக்சேக்கு ஆலோசகரான சுதீஷ் நம்பியார் போல, கேரள மண்ணில் இருந்து மற்றொருவன் ஜான் ஆபிரகாம்.

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு, இந்திய அரசும், சிங்கள அரசும், பெருமளவுக்கு உதவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

1984 இல், டெல்லியில் நடைபெற்ற பிரதமர் இந்திரா படுகொலையைப் பின்புலமாகக் கொண்டு, சீக்கிய இன மக்களை இழிவுபடுத்தித் திரைப்படம் தயாரிக்கும் துணிச்சல், பாலிவுட் திரை உலகுக்கு உண்டா? அப்படி ஒரு படம் தயாரித்து, பஞ்சாபில் திரையிட முனைவானா? தமிழர்கள் சொரணை அற்றுப் போய் விட்டார்களா? சோற்றால் அடித்த பிண்டங்களா?

தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள், இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது, நெஞ்சு கொதித்ததால்தான், கொழுந்து விட்டு எரிந்த மரண நெருப்புக்கு, முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்கள், தங்கள் உயிர்களைப் பலியிட்டனர்.

தமிழனுக்கு நீதி கேட்டு நாம் போராடுகிறோம். நீதியை அழிக்க, வல்லாண்மை சக்திகள், வேகமாக வேலை செய்கின்றன. இந்தக் கூட்டுச் சதியை, தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலக நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இப்படம் திரையிடப்பட்டாலும், அங்கு உள்ள தமிழர்கள், தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திரைப்படத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும்.

இதனை மீறி படம் திரையிடப்பட்டால், மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தடுப்பதற்கு அறப்போர் நடத்திட வேண்டும்!

தமிழகத்தில் திரையிடுவதற்கு, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது; திரை அரங்குகளின் உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என வேண்டுகிறேன். தமிழகத் திரை உலகத்தினர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையிடுவதைத் தடுப்பதற்கு முன்வர வேண்டுகிறேன்.

இதற்கு மேலும் இப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுமானால், அதனைத் தடுப்பதற்கு, திரை அரங்குகளை முற்றுகை இடும் அறப்போரை நடத்துவோம் என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+