வெங்காய லாரியை வழிமறித்து கடத்திய திருடர்கள்: தேடித்திரியும் போலீசார்
பிக்கனேர்: பிக்கனேரில் வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்து திருட்டுக் கும்பல் ஓட்டிச் சென்றுள்ளது.
வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வெங்காயத்தை உரித்தால் அல்ல நினைத்தாலே கண்ணில் நீர் வரும் அளவுக்கு விலை உள்ளது. இந்நிலையில் பணம், நகை திருடிய திருடர்கள் தற்போது வெங்காயத்தை குறி வைத்து திருடுகிறார்கள்.

கடந்த 20ம் தேதி ஜெய்ப்பூர்-டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஷாஹ்புரா கிராமம் அருகே வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரியை 3 ஆயுதம் ஏந்திய திருடர்கள் வழிமறித்து கடத்திச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து சில மணிநேரத்தில் லாரியை வெங்காயத்துடன் மீட்டனர்.
இந்நிலையில் அதே போன்ற சம்பவம் தற்போது மீண்டும் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெங்காயம் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று லூதியானாவுக்கு கிளம்பியது. அது பிக்கனேரின் நோகா பகுதியில் உள்ள ஸ்ரீபாலாஜி என்ற இடத்தில் செல்கையில் ஒரு ஜீப் அந்த லாரியை வழிமறித்தது. ஜுப்பில் இருந்து இறங்கிய 8 பேர் லாரி டிரைவரையும், உதவியாளரையும் சூழ்ந்து கொள்ள அங்கு வந்த திருட்டுக் கும்பல் லாரியை கடத்திச் சென்றது.
இதையடுத்து லாரி டிரைவர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள வெங்காயங்களுடன் கடத்தப்பட்ட லாரியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications