For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமாவளவன் பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சி- விடுதலைச் சிறுத்தைகள்

Google Oneindia Tamil News

Thirumavalavan
சென்னை: கட்சியின் பெயரையும், தலைவரின் பெயரையும் கவிதா என்பவர் தவறாகப் பயன்படுத்தி வந்தது தாமதமாகவே தெரிய வந்தது. அவர் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீது கூறியுள்ள புகார்கள் அபாண்டமானவை, அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அமைந்தவை. எனவே, இது தொடர்பாக காவல்துறையினரிடம் கட்சியின் சார்பில் கவிதா மீது புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வன்னிஅரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் 24-08-2013 அன்று கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார்.

காவல்துறையினரிடம் கொடுத்த புகாரில், கோவையைச் சார்ந்த கார்த்திக், அவரது மனைவி ஜெயந்தி, வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் அவரது உதவியாளரான லதா, லதாவின் கணவர் சந்துரு ஆகியோர், கவிதாவுக்குச் சொந்தமான எஸ்.டி.கே.எஸ். நர்சரிப் பள்ளியை குத்தகைக்குக் கேட்டதாகவும், பின்னர் மிரட்டி 'பவர்' எழுதி வாங்கிக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். புகாரில் எந்த இடத்திலும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் பெயரைக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப் பிரிவிலும், பாண்டிச்சேரி காவல் நிலையத்தில் ஒருமுறையும், பின்னர் சென்னையில் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இரண்டு முறையும் இதே புகாரை கவிதா அளித்திருக்கிறார்.

மேற்கண்ட ஐந்து புகார்களிலும் எமது கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களைப் பற்றி அவதூறாக எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், அதற்கு நேர்மாறாக, கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் அபாண்டமான அவதூறு செய்திகளைக் கூறியிருக்கிறார்.

தான் எடுத்து வளர்க்கும் குழந்தையின் பிறந்த நாளுக்கு கவிதா அழைத்ததன் அடிப்படையில், ஒரு கட்சியின் தலைவர் என்கிற முறையிலும், தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தன் குழந்தையின் விழாவுக்கு வரும்படி விடுத்த வேண்டுகோளை மதிக்க வேண்டும் என்கிற அடிப்படையிலும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தையை வாழ்த்தினார். இது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

அதன் பின்னர் கட்சிக்குத் தொலைக்காட்சி தொடங்குவதற்கு தாம் நிதி உதவி அளிக்க விரும்புவதாகச் சொல்லி சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவரைச் சந்தித்திருக்கிறார். ஆனால், அவ்வாறு நிதி உதவி எதுவும் தேவையில்லை என்று எமது கட்சியின் தலைவர் மறுத்து விட்டார். அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை.

ஆனால், கட்சியின் கொடியை தனது காரில் கட்டிக்கொண்டு தன்னுடன் வியாபாரத் தொடர்பில் உள்ளவர்களை மிரட்டியிருக்கிறார். கட்சியின் பெயரையும், கட்சித் தலைவரின் பெயரையும், கட்சியின் கொடியையும் தொடர்ந்து அவர் தவறாகப் பயன்படுத்தி வந்தது மிகவும் காலதாமதமாகவே தெரிய வந்தது.

ஒரு முறை கட்சிக் கொடி கட்டிய காரில், கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, தலைவர் இல்லாத நேரத்தில் வந்தார். அங்கிருந்த பொறுப்பாளர்கள் விசாரித்தபோது அவர் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என்பதும், கட்சியின் பெயரையும் கட்சியின் தலைவரின் பெயரையும் தவறாகப் பயன்படுத்துவது அவர்தான் என்பதும் தெரிய வந்தது. கட்சியில் இல்லாத ஒருவர் கட்சியின் பெயரையும், கொடியையும் பயன்படுத்துவது தவறு என்று மிகுந்த கனிவோடு அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இனி அவ்வாறு பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

இந்நிலையில், கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நர்சரி பள்ளியை வாங்கிய கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களுக்குத் தெரிந்ததால்தான், தரவேண்டிய பணத்தைத் தராமல் இழுத்தடிக்கிறார்கள், ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று கவிதா கருதியிருக்கிறார்.

அதனால் தலைவரின் ஓட்டுநர் முத்துப்பாண்டியைத் தொடர்புகொண்டு, உங்கள் தலைவரிடம் சொல்லி கார்த்திக்கை மிரட்டிப் பணம் வாங்கித் தாருங்கள்" என்று கேட்டிருக்கிறார். இதுபோன்ற விஷயங்களில் கட்சியோ, கட்சித் தலைவரோ தலையிட மாட்டார்கள் என்று சொல்லி முத்துப்பாண்டி மறுத்திருக்கிறார். அதற்கு, அப்படியா உங்களைத் தலையிட வைக்கிறேன் பார். உங்களை அசிங்கப்படுத்துகிறேன் பார் என்றெல்லாம் முத்துப்பாண்டியிடம் ஆவேசமாகப் பேசியிருக்கிறார். அதன் பின்னரே இவ்வாறு புகார் கொடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிய வருகிறது.

அவர் கூறியுள்ளபடி, கார்த்திக் மற்றும் அவர்களது நண்பர்கள் யாரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை; கட்சிக்குத் தொடர்புடையவர்களுமில்லை. அத்துடன் இந்த விவகாரத்தில் கட்சியோ, கட்சியின் தலைவரோ, தலைவரின் ஒட்டுனரோ யாரும் தலையிடவேயில்லை. கவிதா என்பவர் கூறியிருப்பது முற்றிலும் அபாண்டமான அவதூறாகும்.

கட்சியின் பெயரையும், தலைவரின் பெயரையும் கவிதா தவறாகப் பயன்படுத்தி வந்தது தாமதமாகவே தெரிய வந்தது. எனவே, இது தொடர்பாக காவல்துறையினரிடம் கட்சியின் சார்பில் கவிதா மீது புகார் கொடுக்க முடிவுசெய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
VCK pary has refuted Coimbatore woman Kavitha's charges on its leader Thirumavalavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X