ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: ஆவணங்களை திமுக வழக்கறிஞர் பார்வையிட கோர்ட் அனுமதி

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் அசல் ஆவணங்களை பார்வையிட, மனுதாரர் அன்பழகன் சார்பில் ஆஜராகும் திமுக எம்பியான, வழக்கறிஞர் தாமரை செல்வன், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, அசல் ஆவணங்களை பார்வையிட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் ஆவணங்களை பார்வையிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு வழக்கறிஞர் நீக்கம்:
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திறம்பட செயல்படவில்லை என்றும், அவரை நீக்கிவிட்டு திறமையான வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் திடீரென மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, இது தொடர்பாக பதில் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கர்நாடகா அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதாக தெரிவித்தது.
இதனிடையே, அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications