'சூப்பர் சிங்கர் புகழ்' ஆஃபினாவுக்கு இளம் இசைக்குயில் பட்டம்! அபுதாபியில் களைகட்டிய பாராட்டு விழா!
அபுதாபி: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் ஆஃபினாவுக்கு அபுதாபியில் பாராட்டு விழா நடைபெற்றதுடன் அவருக்கு இளம் இசைக்குயில் என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
விழாவில் துபாய் மற்றும் அபுதாபியைச் சேர்ந்த தமிழார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆஃபினாவின் அழகிய குரலில் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தனர்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

ஆஃபினாவுக்கு பாராட்டு
அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் சார்பாக"ஏர்டெல் சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆஃபினாவுக்குப் பாராட்டு விழா மற்றும் எழுத்தாளர் 'தெரிசை' சிவா எழுதிய 'ருபிணி' நாவல் விமர்சனக் கூட்டம் அபுதாபியில் உள்ள செட்டிநாடு உணவகத்தில் நடைபெற்றது.

செட்டிநாடு உணவகம்
முதல் நிகழ்வாக ஆஃபினாவுக்கு பாராட்டு விழா, சிறுமி பூர்ணிகாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர் குழுமத்தைச் சார்ந்த ஃபிர்தவ்ஸ் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரி Dr. பாலாஜி, இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் தலைவர் திரு. நடராஜன், எதிசலாட் தொலைதொடர்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் நெளசாத் அலி, பிஎல்எஸ் நிறுவன செயல் தலைவர் அஜீத் குமார், தொழிலதிபர் உமா புகழேந்தி, செட்டிநாடு உணவகத்தின் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இளம் இசைக்குயில்
"கானல்" குழுமம் சார்பாக ஆஃபினாவிற்கு "இளம் இசைக்குயில்" என்ற பட்டத்தை அபுதாபி இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரியான டாக்டர் பாலாஜி வழங்கி கௌரவிக்க, நினைவுப் பரிசினை ஆசிப் மீரான் வழங்கினார். ஆஃபினாவின் குரல் வளத்தைப் பாராட்டி விருந்தினர்கள் சிறப்புரையாற்றினார்கள். மேலும், எஃப்ஜே டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ், கேலக்சி புத்தக நிறுவனத்தினர் ஆஃபினாவிற்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.

ருபிணி நாவல்
இரண்டாம் நிகழ்வாக எழுத்தாளர் "தெரிசை" சிவா எழுதிய புனைவு நாவலான "ருபிணி" வாசகர்களால் திறனாய்வு செய்யப்பட்டது. சுரேஷ் பாபு, ஜெஸிலா பானு, பிலால் அலியார், கணேஷ் மதியழகன், பிரபாவதி செந்தில், முகமது ஃபிர்தவ்ஸ், பால்கரசு, பாலாஜி பாஸ்கரன், மொய்தீன் பாட்சா, சுபான் பீர் முகம்மது உள்ளிட்டோர், நாவலின் பேசு பொருள் குறித்தும், நாவல் எழுதப்பட்ட விதமும், வாசகனுக்கு உருவான மனப்போக்கும் குறித்தும் விரிவாகப் பேசினர்.

தெரிசை சிவா
இறுதியாக எழுத்தாளர் "தெரிசை" சிவா வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலுரைத்து ஏற்புரை ஆற்றினார்.விழாவில் சிறப்பான அரங்க அமைப்பையும், உணவு வசதிகளையும் சிறப்பாக செய்திருந்த அபுதாபி செட்டிநாடு உணவக உரிமையாளர்களுக்கு அமீரக எழுத்தாளர்கள
வாசகர் குழுமத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சிறப்பாக ஒருங்கிணைத்த ஃபிர்தவ்ஸ் பாஷாவிற்கும், விழா நிகழ்வுகளை சிரத்தையுடன் நிழற்படம் எடுத்த ஒளிக் கலைஞர்கள் சுப்ஹான், ஹபீப்பிற்கும் விழாக் குழுவினரால் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications