அரியலூரில் அதகளம் செய்யும் சிறுத்தை.. மெகா திட்டம் போடும் வனத்துறை! கூண்டில் சிக்குமா?
அரியலூர்: மயிலாடுதுறையில் இருந்த சிறுத்தை இடம்பெயர்ந்து, அரியலூருக்குள் புகுந்திருக்கும் நிலையில், சிறுத்தையின் காலடி தடத்தை வனத்துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். சிறுத்தை விரைவில் பிடிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சமீப காலமாக வன விலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. அந்த வகையில், கடந்த 2ம் தேதி மயிலாடுதுறையில் சுற்றி வந்த சிறுத்தை இப்போது அரியலூருக்குள் புகுந்திருக்கிறது. மயிலாடுதுறையில் மலை பகுதிகள் ஏதும் இல்லை. இப்படி இருக்கும்போது இங்கு சிறுத்தை எப்படி வந்தது? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிறுத்தையை பிடிப்பது குறித்து விளக்கமளித்த வனத்துறை, "கோமல் மற்றும் காஞ்சிவாய் பகுதியில் நண்டலாற்றுப் பகுதியை ஒட்டிய, சிறுத்தை நடமாடக் கூடிய முக்கிய இடங்களில் 4 கூண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில் ஏற்கெனவே சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட காவிரி ஆற்றின் சிற்றோடைகளில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. முன்னதாக, சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட இடங்கள் மற்றும் சாத்தியக் கூறு உள்ள பகுதிகளில் 19 கேமரா டிராப்கள் பொருத்தப்பட்டுள்ளன. காவிரி ரயில்வே மேம்பாலத்தின் கீழே ஒரு கூண்டும், மஞ்சளாறு ஆற்றங்கரையோரம் 2 கூண்டுகளும் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், சிறுத்தை தற்போது அரியலூரில் இருக்கிறது. எனவே, கோயம்புத்தூரில் இருந்து வந்துள்ள நிபுணர் குழுவினர், 30 கேமரா டிராப்களுடன் சிறுத்தையை பிடிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் மற்றும் அதன் பயன்பாட்டுப் பகுதியின் அமைப்பை அறிய காலை நேரங்களில் ட்ரோன் கேமராவும், இரவு நேரங்களில் தெர்மல் ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுத்தை நடமாட்டம் குறித்து சமூக வலை தளங்களில் பரப்பப்படும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தது.
நேற்று அரியலூர் மாவட்டம் செந்துரை அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறுத்தை சென்றிருப்பது மருத்துவமனை சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியிருந்தது. எனவே கடந்த 10 நாட்களாக போக்கு காட்டி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சிறுத்தை இடப்பெயர்வு: வழக்கமாக அடர்ந்த காடுகளில் வாழும் சிறுத்தை காடுகளே இல்லாத டெல்லா பகுதிக்குள் எப்படி வந்தது? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து கூறும் வனவிலங்கு ஆர்வலர்கள்,
"இந்த இடப்பெயர்வு ஒரே நாளில் நடந்திருக்க முடியாது. காவிரி ஆற்றையொட்டி சிறுத்தை நகர்ந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே டெல்டாவை வந்திருக்கிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில்தான் சிறுத்தை இருக்கிறது. சரியாக சொல்வதெனில், குமரி தொடங்கி தேனி வரையும், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள மலைகளிலும் சிறுத்தைகள் வாழ்ந்து வருகின்றன" என்று கூறியுள்ளனர்.
சிறுத்தை ஒரு நாளைக்கு 50 கி.மீ வரை இயல்பாக நடக்கும் என்பதால், மயிலாடுதுறையிலிருந்து அரியலூருக்கு சென்றிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றும் வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அரியலூரில் சிறுத்தையின் கால்தடத்தை வனத்துறையினர் உறுதி செய்திருக்கிறார்கள். சிறுத்தையை பிடிக்கும் கூட்டுக்குழு, செந்துறையிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். இன்று நிச்சயமாக சிறுத்தையை பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications