பெங்களூரில் இன்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா.. மொத்தம் 14.. நாளை முதல் சர்வதேச விமான சேவைக்கு தடை
பெங்களூர்: பெங்களூரில் மேலும் 3 பேருக்கு இன்று ஒரே நாளில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருக்கு நாளை முதல் சர்வதேச விமானங்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளன.
Recommended Video

கர்நாடக மாநிலம் குல்பர்கா நகரைச் சேர்ந்த ஒரு முதியவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மரணமடைந்தார். இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் மரணம் அங்கு பதிவாகி இருந்தது. இதையடுத்து டெல்லியில் ஒரு மூதாட்டி, மும்பையில் ஒரு முதியவர் என கொரோனா வைரஸ் இதுவரை மூன்று பேரை கொன்றுள்ளது.
இந்த நிலையில் பெங்களூரில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில, சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு இன்று காலை தெரிவித்தார்.
இது பற்றி ஸ்ரீராமலு, வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பெங்களூரை சேர்ந்த 56 வயதாகும் ஒரு நபர் சமீபத்தில் அமெரிக்கா சென்று விட்டு மார்ச் 6 ஆம் தேதி ஊர் திரும்பியிருந்தார், அவருக்கும் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று விட்டு பெங்களூரு திரும்பிய 25 வயது பெண் ஒருவருக்கும், என, இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஸ்ரீராமலு தெரிவித்தார்.

இதன் மூலமாக கர்நாடகாவில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இதனிடையே, இன்று மாலை மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் பேட்டியளித்தார். அப்போது, மேலும் ஒருவருக்கு பெங்களூரில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
10ம் தேதி 35 வயது நபர், அமெரிக்காவிலிருந்து பெங்களூர் வந்தார். வந்ததுமே, அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். 14ம் தேதி கோவிட்-19 வைரஸ் நோய் அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து டெஸ்ட் செய்து பார்த்ததில், கொரோனா பாசிட்டிவ் வந்தது. எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளோம். இவ்வாறு மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நாடு முழுக்க கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 150ஐயும் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications