பெங்களூருக்கு சிக்கல் மேல் சிக்கல்.. 2வது விமான நிலையம் குறித்து AAI தந்த முக்கியமான ரிப்போர்ட்
பெங்களூர்: கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மொத்தம் 3 இடங்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், அதை ஏஏஐ அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
கர்நாடகாவில் விமானப் போக்குவரத்து அதிகரித்து வருவதால் அங்கு 2வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பெங்களூர் 2வது விமான நிலையம் தொடர்பாகச் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது 2வது ஏர்போர்ட்டிற்கு முன்மொழியப்பட்ட மூன்று இடங்களை ஏஏஐ எனப்படும் இந்திய விமான நிலைய ஆணையக் குழு நேரில் ஆய்வு செய்தது.

ஏஏஐ ரிப்போர்ட்
3 இடங்களையும் ஆய்வு செய்த ஏஏஐ தனது ரிப்போர்ட்டை முதலில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் மதிப்பீட்டிற்காக அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து இப்போது அந்த ரிப்போர்ட் கர்நாடக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.. பெங்களூர் கனகபுரா சாலையில் ஹாரோஹள்ளிக்கு அருகில் உள்ள இரண்டு இடங்கள் (முறையே 4,800 ஏக்கர் மற்றும் 5,000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டவை) மற்றும் நெலமங்கலாவிற்கு அருகில் குனிகல் சாலையில் உள்ள 5,200 ஏக்கர் இடம் ஆகிய மூன்று இடங்களிலும் விமான நிலையம் அமைப்பதில் உள்ள சவால்களை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கர்நாடகத் தொழில்துறை அமைச்சர்
இது தொடர்பாக கர்நாடகத் தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறுகையில், "இந்த அறிக்கை எந்த இடத்தையும் அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை.. ஒவ்வொரு இடத்திலும் உள்ள சவால்களை மட்டுமே இது குறிப்பிடுகிறது. ஒவ்வொரு இடத்திற்கும் அதன் சாதக பாதகங்கள் உள்ளன. இப்போது, எங்கள் குழு இந்த அறிக்கையின் அடிப்படையில் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும். அதன் பிறகே ஒரு இடம் தேர்வு செய்யப்படும். எல்லா வகையான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்வோம்.
முதலில் திட்டத்தை ஆரம்பிக்கச் சிறந்த ஆலோசனை நிறுவனங்களை உள்ளே கொண்டு வருவோம். ஆரம்ப கட்ட பணிகள் முடிந்ததும் அடுத்த கட்டமாகத் தனியார் டெவலப்பர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். அனைத்து ஆய்வுகளும் ரிப்போர்ட்களும் வெளிப்படையாகக் கையாளப்படும். அப்போதுதான் நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியும்" என்றார்.
2வது ஏர்போர்ட்
பெங்களூரில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பெங்களூர் ஏர்போர்ட் நிர்வாகம் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. 2வது ஏர்போர்ட் அமைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு கடந்த 2023ஆம் ஆண்டிலேயே பெங்களூர் ஏர்போர்ட் நிர்வாக இயக்குநர் ஹரி மரார் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது பரிசீலனையில் உள்ள இடங்களுக்கு அருகே பன்னர்கட்டா சிகரம் இருப்பதே முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இது குறித்து ஏஏஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "விமானம் புறப்படும்போது அல்லது தரையிறங்கும்போது பன்னர்கட்டா சிகரம் ஒரு கவலை தரும் ஒன்றாகவே இருக்கிறது.. விமானம் தரையிறங்குவது அல்லது புறப்படுவது தொடர்பான பல்வேறு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முழு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
சிக்கல்கள் என்ன
மேலும், பரிசீலனையில் உள்ள இடங்களின் நிலப்பரப்பும் கூட ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளது. நெலமங்கலா-குனிகல் அருகே உள்ள பகுதியில் மலை மேடுகள் அதிகமாகவே உள்ளது. கற்களும் அதிகம். அந்தக் கற்களை உடைத்து நிலத்தைச் சமப்படுத்த முடியும் என்றாலும் கூட அது கட்டுமான செலவுகளை அதிகரிக்கும்" என்றார்.
இன்னொரு சிக்கல்
மேலும், இன்னொரு சிக்கல் பரிசீலனையில் இருக்கும் மூன்று இடங்களும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமானப் பகுதிக்குள் வருகிறது. இருப்பினும், சில நடவடிக்கைகள் மூலம் இதைச் சமாளிக்கலாம். அதாவது விமானம் புறப்படும்போது அது ஏர்போர்ட் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அமைப்பின் கீழ் செயல்பட வேண்டும்.
ஆனால் புறப்பட்டு சில நொடிகளில் அது ஹெச்.ஏ.எல் விமானப் பகுதிக்குள் செல்லும். அப்போது அது ஹெச்.ஏ.எல் விமான போக்குவரத்துக் கட்டுப்பாடு அமைப்பின் கீழ் செயல்பட ஆரம்பிக்கும். இப்படி ஒவ்வொரு விமானமும் இரு போக்குவரத்துக் கட்டுப்பாடு அமைப்பின் கீழ் செயல்பட வேண்டு இருக்கும். இதற்கு ஹெச்.ஏ.எல் நிறுவனம் கூடுதல் ஆட்களை எடுக்க வேண்டி இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications