தம்பதி மீது கார் மோதிய விபத்து.. பெண் பலி.. பிரபல கன்னட நடிகர் அதிரடி கைது
பெங்களூர்: தம்பதி மீது கார் ஏற்றியதில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் பிரபல நடிகர் நாகபூஷனா கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னட திரையுலகில் 15 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் நாகபூஷனா (37). இவர் சங்கஷ்ட கர கணபதி எனும் திரைப்படத்தின் மூலம் 2018ஆம் ஆண்டு அறிமுகமானார்.

இவர் இக்கத், படவா ராஸ்கல் மற்றும் ஹனிமூன் ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். இக்கத் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வாங்கியவர். இவர் நேற்று இரவு 9.45 மணிக்கு பெங்களூரின் உத்தரஹள்ளி பகுதியிலிருந்து புறநகர் பகுதியான கொனனகுன்டே எனும் இடத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
கார் வசந்தபுரம் மெயின் ரோடு அருகில் வரும் போது அங்கு கிருஷ்ணா, அவருடைய மனைவி பிரேர்னா (48) ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நாகபூஷனாவின் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து நடந்து சென்ற தம்பதி மீது கார் வேகமாக மோதியது.
பின்னர் அங்கிருந்த ஒரு மின்கம்பத்தில் மோதி கார் நின்றது. இந்த விபத்து ஏற்பட்ட நிலையில் காயமடைந்த கிருஷ்ணாவையும் பிரேர்னாவையும் நாகபூஷனா மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக பிரேர்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கால்கள், தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் காயமடைந்த கிருஷ்ணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து வேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கியதற்காக குமாரசாமி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை நாகபூஷனா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications