அப்பா ஏடிஜிபி.. 15 கிலோ தங்கம் கடத்திய தமிழ் நடிகை பெங்களூர் ஏர்போர்ட்டில் கைது.. யார் இந்த ரன்யா?
பெங்களூர்: துபாயில் இருந்து 14.80 கிலோ நகையுடன் பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய நடிகை ரன்யா ராவை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்த நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ரன்யா ராவ் தமிழில் ஹீரோயினாக நடித்துள்ளதும், அவரது தந்தை ஐபிஎஸ் அதிகாரி என்பதும் தெரியவந்துள்ளது.
கர்நாடகாவை சேர்ந்தவர் ரன்யா ராவ். வயது 32. இவர் கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவில் நடிகையாக நடித்துள்ளார். கன்னட மொழியில் நடிகர் கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டில் வெளியானது.

அதன்பிறகு ரன்யா ராவ் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிப்பில் 2016ல் வெளியான ‛வாகா' திரைப்படத்தில் ஹீரோயினாக ரன்யா ராவ் நடித்தார்.
இந்நிலையில் தான் ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று புறப்பட்டார். அவர் வந்த விமானம் நள்ளிரவில் பெங்களூர் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. அப்போது அவர் தனது உடலில் அதிகப்படியான நகையை அணிந்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த டிஆர்ஐ எனும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர்.
மேலும் விமான நிலையத்தில் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடைமைக்கு நடுவே தங்ககட்டிகள் இருப்பதும் தெரியவந்தது. அதோடு அவர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கநகை, தங்க பிஸ்கட்டை எடுத்து வந்தது தெரியிவந்தது. நடிகை ரன்யா ராவிடம் இருந்த நகை, தங்ககட்டி என்று மொத்தம் 14.80 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பிறகு அவரை பெங்களூர் எச்பிஆர் லே-அவுட்டில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநர அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அவர் 14.80 கிலோ தங்கத்தை துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் எப்படி அதிகாரிகளிடம் சிக்கினார்? என்பது பற்றிய முக்கிய தகவல்களும் கிடைத்துள்ளது. அதாவது கடந்த 15 நாளில் மட்டும் ரன்யா ராவ் 4 முறை துபாய் சென்று வந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து தான் நேற்று நள்ளிரவில் துபாயில் இருந்து வந்த அவரிடம் நடத்திய சோதனையில் 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ரன்யா ராவ் அடிக்கடி தங்கம் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர் பின்னணியில் இன்னும் வேறு பல நபர்கள் இருக்கலாம் என்ற அதிகாரிகள் நினைக்கின்றனர். இதுபற்றி வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரன்யா ராவ் கடந்த 1993 மே 28 ம் தேதி கர்நாடகாவின் சிக்கமகளூரில் பிறந்தார். இவரது தந்தை ஐபிஎஸ் அதிகாரியாக என்றும், அவர் கர்நாடகாவில் ஏடிஜிபியாக பணியாற்றி வருகிறார் என்ற முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications