நீண்ட ஆலோசனைக்கு பின்.. சென்னபட்டணா இடைத்தேர்தலில் மகனை களமிறங்கிய குமாரசாமி! இவ்வளவு தயக்கம் ஏன்?
பெங்களூர்: நமது நாட்டில் இப்போது பல்வேறு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக சென்னபட்டணா தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் மூத்த அரசியல்வாதி சி.பி. யோகேஸ்வரா தேர்தலில் களமிறங்கும் நிலையில், ஜேடிஎஸ் சார்பில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நமது நாட்டில் இப்போது இரு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகவும் மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

இடைத்தேர்தல்: இது தவிரவும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கர்நாடகாவில் உள்ள சென்னபட்டணா தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு இந்த தொகுதியில் நடந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி தலைவர் குமாரசாமி வெற்றி பெற்று இருந்தார். இருப்பினும், அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அவருக்கு கேபினட் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து குமாரசாமி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்தே அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சி.பி. யோகேஸ்வரா அறிவிக்கப்பட்டுள்ளார். யோகேஸ்வரா இதே தொகுதியில் பாஜக சார்பில் ஐந்து முறை போட்டியிட்டு வென்றவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த நிலையில், அவர் சென்னபட்டணா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான் அவருக்கு எதிராகக் குமாரசாமியின் மகன் 36 வயதான நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர் யார்: காங்கிரஸ் சார்பில் யோகேஸ்வரா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அங்கு ஜேடிஎஸ் கட்சிக்கு அழுத்தம் அதிகரித்தது. யோகேஸ்வராவுக்கு அந்த தொகுதியில் செல்வாக்கு மிக அதிகம். இதனால் அவருக்கு எதிராக வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் நிகில் குமாரசாமி அதற்குச் சரியாக இருப்பார் என்று கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாகக் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், அப்பகுதி மக்களுடன் தீவிர ஆலோசனை செய்தே குமாரசாமி இறுதியாக நிகிலை வேட்பாளராக அறிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா உடனான சந்திப்பிற்கு பிறகே, இது குறித்த அறிவிப்பு வெளியானது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, "சென்னபட்டணா தொகுதியின் வேட்பாளராக நிகில் குமாரசாமியை அறிவித்துள்ளோம். நிச்சயம் அவர் வெல்வார். தொகுதி முழுக்க நானும் உடன் சென்று பிரச்சாரம் செய்வேன். நிகில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெல்வார்" என்றார்.
ஏன் ஆலோசனை: குமாரசாமி தனது மகனை வேட்பாளராக அறிவிக்க ஏன் இவ்வளவு ஆலோசனைகளை நடத்தினார் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். உண்மையில் நிகிலுக்கு இந்த இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வமே இல்லையாம். வேறு ஒருவரை நிறுத்தலாம் என்றே நிகில் சொல்லி இருக்கிறார். இதன் காரணமாகவே குமாரசாமி தயங்கி இருக்கிறார். இருப்பினும், கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்தால் நிகில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்,
மூன்றாவது தேர்தல்: நிகில் குமாரசாமி களமிறங்கும் மூன்றாவது தேர்தல் இதுவாகும். அவர் முதலில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார். அதில் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் சுமலதா அம்பரீஷிடம் நிகில் தோல்வி அடைந்தார். கடந்தாண்டு நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் ராமநகராவில் இருந்து போட்டியிட்டார். இது ஜேடிஎஸ் கோட்டைகளில் ஒன்று. ஆனால், இந்தத் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளரிடம் அவர் சுமார் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications