5 ஆக பிரிக்கப்படும் பெங்களூர் மாநகராட்சி! கர்நாடகா மேல்சபையிலும் நிறைவேறிய மசோதா.. முழு விவரம்
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிக்க வசதியாக ‛கிரேட்டர் பெங்களூர் கவர்னன்ஸ் (திருத்தம்) மசோதா 2025' என்பது கர்நாடகா சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டது. சட்டசபையில் இந்த மசோதா ஏற்கனவே நிறைவேறிய நிலையில் இன்று கர்நாடகா மேல்சபையில் நிறைவேறியது. இதன்மூலம் பெங்களூர் மாநகராட்சி 5 ஆக பிரிக்கப்படுவது உறுதியாகி உள்ள நிலையில் அதன் பெயர் உள்பட பிற முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ளனர். பெங்களூர் நகரில் மட்டும் 28 சட்டசபை தொகுதிகள், 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. பெங்களூர் மாநகராட்சியில் மொத்தம் 243 வார்டுகள் இருந்தன. தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். இதில் டிகே சிவக்குமார் வசம் தான் பெங்களூர் நகர மேம்பாட்டு துறை உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூரை 5 மாநகராட்சியாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 ஆக பிரிக்க மசோதா
இதற்கு எதிர்க்கட்சியாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரித்தால் பிற மொழியினரின் கைகளுக்கு மேயர் பதவி செல்லும் என்று பாஜக எதிர்க்கட்சி தலைவர் ஆர் அசோக் கூறினார். இருப்பினும் பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிப்பதில் டிகே சிவக்குமார் உறுதியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தான் பெங்களூர் மாநகராட்சியை பிரிக்கும் வகையிலான மசோதா கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக பெருநகர பெங்களூரு (கிரேட்டர் பெங்களூரு) ஆணைய திருத்த மசோதாவை பெங்களூரு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் தாக்கல் செய்தார்.
சட்டசபை - மேல்சபையில் நிறைவேற்றம்
இந்த மசோதாவுக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் நிறைவேறியது. இந்த மசோதா பற்றி டிகே சிவக்குமார் பேசுகையில், ‛‛ நம்ம பெங்களூருவின் தெளிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் பரவலாக்கப்பட்ட நிர்வாகத்தை உறுதி செய்வதற்கான பெருநகர பெங்களூரு ஆணைய திருத்த மசோதா-2025 சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த திருத்த மசோதா மாநகராட்சிகளின் செயல்பாட்டில் பெருநகர பெங்களூரு ஆணையம் தலையிடாது. அரசியலமைப்பின்படி மேயர்களும், மாநகராட்சி உறுப்பினர்களும் முழு அதிகாரங்களை தொடர்ந்து பெறுவார்கள். நிதி சுதந்திரம், வரி வசூல் உரிமைகள், தேர்தல்கள் மற்றும் இடஒதுக்கீடுகளை அரசியல் சாசனத்தின் 74-வது திருத்தம் முழுமையாக உறுதி செய்கிறது'' என்றார்.
இதையடுத்து இந்த மசோதா இன்று கர்நாடகா மேல்சபையிலும் டிகே சிவக்குமார் தாக்கல் செய்தார். அங்கும் இந்த மசோதா காங்கிரஸ் எம்எல்சிக்களின் ஆதரவில் நிறைவேறியது. இதையடுத்து இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும். இதன்மூலம் பெங்களூர் மாநகராட்சி 5 ஆக பிரிவது உறுதியாகி உள்ளது.
மாநகராட்சியின் பெயர்கள்
இந்த மசோதாவின்படி பெங்களூரில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இதற்காக 5 மாநகராட்சிகள் உருவாக்கப்படுகின்றன. அதன்படி தற்போது உள்ள பிபிஎம்பி எனும் பெங்களூர் மாநகராட்சி பெங்களூர் சென்ட்ரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு, பெங்களூர் கிழக்கு, பெங்களூர் மேற்கு என 5 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட உள்ளது. இதற்கான எல்லைகள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட உள்ளது.
தற்போது பெங்களூர் மாநகராட்சி 700 சதுர கிலோமீட்டரை கொண்டுள்ளது. இந்த புதிய மசோதவின் படி பெங்களூர் விஸ்தரிப்பு செய்யப்படுகிறது. அருகே உள்ள பிற கிராமங்கள் பெங்களூருவுக்குள் கொண்டு வரப்பட்டு 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெங்களூரின் 5 மாநகராட்சிகள் செயல்பட உள்ளது.
ஒரே குடையின் கீழ்...
அதேபோல் புதிதாக கிரேட்டர் பெங்களூர் ஆணையம் (GBA or Greater Bengaluru Authority) உருவாக்கப்பட உள்ளது. இது மேற்பார்வை அமைப்பாக செயல்படும். இந்த அமைப்பு தான் பெங்களூர் மாநகராட்சிகளின் எல்லைகளை வரையறை செய்த வழங்க உள்ளது. அதுமட்டுமின்ற பெங்களூரை மையப்படுத்தி செயல்படும் பெங்களூர் மேம்பாட்டு ஆணையம் (Bengaluru Development Authority or BDA), பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் (BWSSB), பெங்களூர் மாநகர போக்கவரத்து கழகம் (BMTC) உள்ளிட்டவையும் ஒரே குடையின் கீழ் ‛கிரேட்டர் பெங்களூர் ஆணையத்தின்' மேற்பார்வையில் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications