தனியார் துறையில் இட ஒதுக்கீடு.. கிளம்பிய கடும் எதிர்ப்பு.. தற்காலிகமாக நிறுத்தி வைத்த கர்நாடக அரசு!
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தரும் மசோதாவுக்குச் சமீபத்தில் அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கர்நாடக அரசு இந்த மசோதாவை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா ஐடி உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களில் மேனேஜ்மென்ட் பணிகளில் 50%, மேனேஜ்மென்ட் அல்லாத பணிகளில் 75% வேலைகள் உள்ளூர் பணியாளர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதாக இருந்தது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இப்போது சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு ஆட்சியில் இருக்கிறது. தனியார் துறையில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கும் மசோதாவை அம்மாநில அரசு கொண்டு வந்தது.

இந்த மசோதாவின் கீழ் ஐடி உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களில் மேனேஜ்மென்ட் பணிகளில் 50%, மேனேஜ்மென்ட் அல்லாத பணிகளில் 75% வேலைகள் கன்னர்களுக்கே கிடைக்கும். இந்த மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதலும் அளித்தது.
சித்தராமையா: கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இது குறித்த அறிவிப்பு முதலில் வெளியானது. தனது அரசு கன்னடர்கள் சொந்த மாநிலத்தில் வசதியான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்யும் என்றும், கன்னட மாநிலத்தில் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவதை இது தடுக்கும் என்றும் அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். மேலும், அதில் சில துறைகளில் 100% கன்னடர்களுக்கு வேலை என்பது கட்டாயமாக்கப்படும் என்று இருந்தது.
தற்காலிகமாக நிறுத்திவைப்பு: இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் தொழில் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் தொழிலதிபர்கள் இந்த மசோதாவை வெளிப்படையாகவே எதிர்த்தனர். இதற்கிடையே இந்த மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டரில், "தனியார் நிறுவனங்கள், தொழில்களில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா இன்னும் தயாரிப்பு கட்டத்தில் உள்ளது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவான விவாதத்திற்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
விளக்கம்: 100% கன்னடர்களுக்கு என்று முதல்வரது போஸ்டில் இருந்தது விவாதத்தைக் கிளப்பிய நிலையில், தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் இது குறித்து விளக்கமளித்துள்ளார், அதில் அவர், "மேனேஜ்மென்ட் அளவில், 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேனேஜ்மென்ட் இல்லாத பிரிவுகளில் 70 சதவீதத்திற்குப் பணி கன்னடர்களுக்கு வழங்க வேண்டும்.
எதற்காக இந்தச் சட்டம்: அதேநேரம் தகுதியான திறமையான நபர்களை நிறுவனங்களால் பணியமர்த்த முடியாவிட்டால், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்தலாம். அதாவது கர்நாடகாவில் அத்தகைய திறன்களைக் கொண்டவர்களைக் கண்டறிய முடியவில்லை என்றால் அப்போது வேலைகளை அவுட்சோர்ஸ் செய்யலாம். அதேநேரம் கர்நாடகாவில் திறமைக்குப் பஞ்சமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இங்குத் திறமையான தொழிலாளர்கள் கிடைத்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டத்தைக் கொண்டு வர முயல்கிறோம்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
முதலில் இந்த மசோதா குறித்த தகவல் செவ்வாய்க்கிழமை மாலை வெளியான நிலையில், அதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும் ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications