முதல்வர் பதவியை நெருங்கிய சித்தராமையா! டிகே சிவக்குமாருக்கு எதிராக 6 முக்கிய அஸ்திரம்! இதோ லிஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை எட்டிப்பிடிப்பதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி உள்ளது. நாளுக்கு நாள் இந்த மோதல் உச்சக்கட்டத்தை தொடும் நிலையில் டிகே சிவக்குமாருக்கு வழங்காமல் தனக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்பது பற்றி சித்தராமையா காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் 6 முக்கிய பாயிண்டுகளை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகள் உள்ள நிலையில் மெஜாரிட்டிக்கு 113 இடங்கள் தேவை. ஆனால் கங்கிரஸ் கட்சி அதனை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்துள்ளது.

இந்த தேர்தலில் பாஜக வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே வென்று காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அதேபோல் கிங்மேக்கராக மாறுவோம் எனக்கூறிய ஜேடிஎஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் வெறும் 19 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மற்றவர்கள் 4 இடங்களில் வென்றுள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்பதில் சித்தராமையா மற்றும் டிகேசிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சித்தராமையா நேற்று டெல்லி சென்ற நிலையில் டிகே சிவக்குமார் இன்று அங்கு சென்றுள்ளார். இருவரும் முதல்வர் பதவியை தனக்கு தான் வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதனால் அடுத்த முதல்வர் யாராக இருக்கும் என்ற மிகப்பெரிய கேள்வி உள்ளது.
இந்நிலையில் தான் முதல்வரை தேர்வு செய்ய டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனைநடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் இந்த தலைவர்களை டிகே சிவக்குமார் சந்திக்க உள்ளார். இதில் காங்கிரஸ் தலைவராக கட்சியை வளர்த்துள்ளேன். கட்சிக்காக தியாகம் செய்துள்ளேன். காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தான் பெரும்பாலும் காங்கிரஸில் முதல்வராகிறார். அந்த வகையில் தனக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என அவர் கூற உள்ளார்.

மேலும் மாநிலத்தில் ஜேடிஎஸ்ஸின் ஓட்டு வங்கியான ஒக்கலிகர் மற்றும் பாஜகவின் ஓட்டு வங்கியான லிங்காயத்துகளின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை அதிகம் இடைத்துள்ளதால் தான் மெஜாரிட்டி பெற்றோம். தலித், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் வாக்கு சித்தராமையாவல் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை. அந்த ஓட்டுகள் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு தான் கிடைக்கும். இதனால் சித்தராமையாவக்கு பதில் தனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கூற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான் முதல்வர் பதவியை பெற சித்தராமையா 8 முக்கிய பாயிண்டுகளை கட்சி மேலிட தலைவர்களிடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா இன்றும் அதனை கூறி முதல்வர் பதவியை பெற முனைப்பு காட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சித்தராமையா முன்வைக்க உள்ள 6 முக்கிய பாயிண்டுகள் வருமாறு:

முதல் பாயிண்ட்: கர்நாடகாவில் சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததில் எனது பங்கு அதிகம் உள்ளது. இதனை மறக்க கூடாது. மேலும் முதல்வராக 2013-2018 காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் இந்த தேர்தலில் கைக்கொடுத்துள்ளது.
2வது பாயிண்ட்: கர்நாடகா தேர்தல் வேளையில் பல்வேறு சர்வேக்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சர்வேக்களில் அடுத்த முதல்வராக யார் வேண்டும்? என்ற கேள்விகளுக்கு மக்கள் அதிகம் என் பெயரை தான் கூறினார்கள். எனவே மக்களும் கூட என்னை தான் முதல்வராக்க விரும்புகின்றனர்.
3வது பாயிண்ட்: ஹைதராபாத் கர்நாடகா மற்றும் மும்பை கர்நாடகா பகுதிகளில் கடந்த முறை பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. தற்போது காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது. இங்கு சிறுபான்மையினர், தலித் மக்கள் அதிகம் உள்ளனர். இங்கு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்ற எனது பங்கு முக்கியமான ஒன்றாகும்.

4வது பாயிண்ட்: மேலும் மாநிலத்தல் அகிண்டா சமுதாய மக்கள் என்னை நம்புகின்றனர். அதேபோல் உயர் வகுப்பினருக்கும் நான் விரோதி என்பது இல்லை. அவர்களும் என் மீது நம்பிக்கை வைக்கின்றனர். இப்படி அனைத்து சமுதாயத்துக்கும் உரியவனாக நான் இருக்கிறேன். மாநிலத்தில் வாழும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்களின் ஆதரவும் எனக்கு உள்ளது.
5வது பாயிண்ட்: மைசூர் -கர்நாடகா பகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியதற்கு ஒக்கலிகர் (டிகே சிவக்குமாரின் சமுதாயம்) மட்டுமே காரணம் அல்ல. அங்கும் ஒவ்வொரு தொகுதியிலும் இஸ்லாமியர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள் உள்ளனர். இவர்களின் வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு கெட்டியாக கிடைத்ததால் தான் அங்கு அதிக தொகுதிகளை கைப்பற்றினோம்.
6வது பாயிண்ட்: இவை அனைத்தையும் தவிர காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் அதிகமானவர்கள் எனக்கு ஆதரவாக தான் உள்ளனர். ஒரு மாநில முதல்வரை எம்எல்ஏக்கள் தேர்வு செய்வது தான் வழக்கமான நடைமுறை. அதன்படி பார்த்தால் எம்எல்ஏக்களின் ஆதரவு அதிகம் உள்ள எனக்கு தான் முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என சித்தராமையா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications