காதலனுடன் பெண் ஓட்டம்! இளைஞன் தாயை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல்! கர்நாடகாவில் பகீர்
பெங்களூர்: பெண் ஒருவர் காதலனுடன் ஓட்டம் பிடித்த நிலையில், அந்த இளைஞனின் தாயை நிர்வாணமாக்கித் தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஒரு கிராமத்தில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கே இளம்பெண் ஒருவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இருப்பினும், அந்த பெண் மற்றொரு நபரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊரில் சிலர், அந்த காதலனின் தாயைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாகவும் அழைத்துச் சென்று மின்கம்பத்தில் கட்டியுள்ளனர்.
பகீர் சம்பவம்: அந்த இளம்பெண் யாருடன் வீட்டை விட்டு வெளியேறினார் என்பதைத் தெரிந்ததும் அப்பெண்ணின் குடும்பத்தினர், புதிய வந்தமுரி கிராமத்தில் உள்ள அந்த இளைஞனின் வீட்டைத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரது தாயை இழுத்துச் சென்று தாக்கி, நிர்வாணமாக்கி ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றுள்ளனர். இதைக் கொடூரத்தைக் கண்ட அங்கிருந்த சிலர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணை விடுவித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஏழு பேரைக் கைது செய்துள்ள போலீசார் இது தொடர்பாக முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் நிலைமை கையைவிட்டுச் செல்லாமல் இருக்கக் கூடுதல் போலீசாரும் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் சொல்வது என்ன: இது குறித்து பெலகாவி போலீஸ் கமிஷனர் சித்தராமையா கூறுகையில், "24 வயதான அசோக் மற்றும் 18 வயதான பிரியங்கா இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். திங்கள்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த மிருக தனமான செயலை செய்துள்ளனர்.
காலை 4 மணிக்கு இது குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதலில் சப் இன்ஸ்பெக்டர் அங்கே சென்ற நிலையில், தொடர்ந்து மற்ற மூத்த அதிகாரிகளும் அங்கே விரைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை ஏழு பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
கர்நாடகா முதல்வர் கருத்து: இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது மனிதத் தன்மையற்ற சம்பவம் எனக் குறிப்பிட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த விவகாரத்தில் தவறு செய்தோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இதற்கு நாம் தலைகுனிய வேண்டும். இதுபோன்ற கொடூரமான செயல்களை எக்காரணம் கொண்டும் எங்கள் அரசு பொறுத்துக் கொள்ளாது. இந்த விவகாரத்தில் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்குவது எங்கள் பொறுப்பு" என்றார்.
கடும் நடவடிக்கை: அதேபோல கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வராவும் சம்பவம் நடந்த கிராமத்திற்கு விரைந்தார். வீட்டில் தனியாக இருந்த இளைஞனின் தாயை 10- 15 பேர் வந்து தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஏழு பேர் இதில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications