70+ சீட்டாமே.. நெருங்குது தேர்தல்.. இன்று சர்வதேச விமான கண்காட்சி.. பெங்களூரு வருகிறார் பிரதமர் மோடி
சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று பெங்களூரில் துவக்கி வைக்கிறார்
பெங்களூரு: பெங்களூர் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். கடந்த 2021ல் விமான கண்காட்சி நடந்த நிலையில், ஆசியாவில் நடக்கும் மிக பெரிய விமான கண்காட்சி இதுவாகும் என்பதால் மிகப்பெரிய கவனத்தை இந்த கண்காட்சி ஈர்த்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால், ஆட்சியை தக்க வைக்க பாஜக களத்தில் குதித்துள்ளது..
அம்மாநிலத்தில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

பின்னடைவு
எனவே, கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது..அதனால், அங்குள்ள அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது.. இதில் பாஜக சற்று வீரியம் காட்டி வருகிறது.. காரணம், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் பாஜக சார்பில் சமீபத்தில் ஒரு சர்வே மேற்கொள்ளப்பட்டது... இந்த சர்வே முடிவில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவும், காங்கிரஸ் கட்சியின் ‛கை' ஓங்கியும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது..

வியூகங்கள்
அதாவது, மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் 70 இடங்களுக்குள் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்று சர்வே ரிப்போர்ட் வந்துள்ளது.. இந்த தகவல் டெல்லி பாஜகவரை சென்று, அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும் தகவல்கள் பரபரத்தன.. இதையடுத்து, மேலிட தலைவர்கள் கர்நாடகத்தை மையம் கொண்டு, பிரச்சாரங்களை துவக்கலாம் என்றும், குறிப்பாக, மோடியின் பிரசாரம், அமித்ஷாவின் வியூகங்கள் போன்றவை எப்படியாவது பாஜகவை மீண்டும் ஆட்சியில் தூக்கி நிறுத்தக்கூடும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

தற்கொலைகள்
கர்நாடக பாஜகவில் அடுத்தடுத்த பிரச்சனைகள், கல்விப்பாடத்திட்டங்களில் ஏற்பட்ட சர்ச்சைகள், ஒப்பந்தக்காரர்கள் தற்கொலை என நெருக்கடிகள் கூடி வருகின்றன.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, மதம்சார்ந்த பிரச்சனைகளும், போராட்டங்களும் கர்நாடகாவில் வெடித்து வரும்நிலையில், பாஜகவுக்கு எதிராக தேர்தலில் அமையலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்... இப்படிப்பட்ட சூழலில்தான், கர்நாடக மாநிலத்தில் தன்னுடைய கவனத்தை மேலிட பாஜக குவித்துள்ளது..

கண்காட்சி
மேலும், பிரதமர் மோடியும், தொடர்ந்து அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்... பெங்களூர் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். அந்தவகையில் இன்று கர்நாடகம் செல்கிறார்.. மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் 'ஏரோ இந்தியா' என்ற பெயரில் விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று முதல், அதாவது 13-ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்திருந்தது...

பிரதமர் மோடி
அதன்படி, எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று சர்வதேச விமான கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது... இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். இதில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத்துறை, கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சி செய்துள்ளது...

கூடும் ஆர்வம்
விமான கண்காட்சியில் மொத்தம் 807 அரங்குகள் அமைக்கப்பட இருப்பதாகவும், அவற்றில் 107 அரங்குகள் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான கண்காட்சியில் நம்முடைய நாட்டை தவிர வெளிநாடுகளை சேர்ந்த விமானங்களும் விண்ணில் பறந்து சாகசங்களில் ஈடுபட போகின்றனவாம்.. குறிப்பாக இந்தியா பெவிலியனில் இருந்து தேஜஸ் போர் விமானம் முதல் முறையாக விமான கண்காட்சியில் பங்கேற்க இருப்பது ஆர்வத்தை கூட்டி வருகிறது.. விமான கண்காட்சி காரணமாக பிரதமர் வருகை காரணமாகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன..

சாகசம்
காலை 9.30 மணியில் இருந்து காலை 11.30 மணிவரை விமானங்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளது. பெங்களூருவில் 5 நாட்கள் நடைபெறும் இந்த விமான கண்காட்சியை கண்டுகளிக்க பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி, ஒரு நபர் ரூ.2,500 கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெற்றுக் கொண்டு கண்காட்சிக்கு சென்று விமானங்களின் சாகசங்களை பார்த்து ரசிக்க முடியுமாம்.. கர்நாடகா மாநில சட்டசபை நெருங்கிவரும் நிலையில் பிரதமர் மோடி தொடர்ந்து அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications