கர்நாடகா: ஏடிஎம்மில் பணம் நிரப்பும் 2 பேரை சுட்டு கொன்று பணப்பெட்டியை தூக்கி சென்ற கொள்ளையர்கள்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பீதர் டவுனில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப சென்ற ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்ற 2 முகமூடி கொள்ளையர்கள், அவர்கள் வைத்திருந்த பணப்பெட்டியை தூக்கி கொண்டு பைக்கில் எஸ்கேப் ஆகினர்.
கர்நாடகா மாநிலத்தில் பீதர் என்ற மாவட்டம் உள்ளது. பீதர் டவுன் பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடம் உள்ளது. இது நகரின் மையப்பகுதியாகும். எப்போதும் ஆள்நடமாட்டம் என்பது அதிகம் இருக்கும்.

இந்நிலையில் தான் சிவாஜி சவுக் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் நிரப்ப இன்று வாகனம் ஒன்று வந்தது. ஏடிஎம் முன்பு உள்ள சாலையோரம் வாகனம் நிறுத்தப்பட்டது. அந்த வாகனத்தில் இருந்து சிஎம்எஸ் ஏஜென்சியை சேர்ந்த ஏடிஎம்மில் பணம் நிரப்ப ஊழியர்கள் 2 பேர் இறங்கினர்.
கிரி வெங்கடேஷ், சிவக்குமார் ஆகியோர் வாகனத்தில் இருந்த பணப்பெட்டியை திறந்து பணத்தை எடுக்க முயன்றனர். இந்த வேளையில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் அவர்களின் கண்களில் மிளகாய் பொடியை தூவினர். இதனால் ஊழியர்கள் கண்எரிச்சலில் கதறினர். அதோடு அந்த கும்பல் பணத்தை கொள்ளையடிக்க வந்திருப்பதை ஊழியர்கள் உணர்ந்தனர். இதனால் பணப்பெட்டி கொள்ளையர்கள் கையில் கிடைக்காமல் தடுக்க முயன்றனர்.
அப்போது ஆத்திரமடைந்த கொள்ளை கும்பல் துப்பாக்கியை எடுத்து ஊழியர்கள் 2 பேரை நோக்கி 5 முறை சுட்டது. அதில் அவர்கள் 2 பேரும் சரிந்து கீழே விழுந்த நிலையில் வாகனத்தில் இருந்த பணப்பெட்டியை எடுத்த கும்பல் பைக்கின் முன்பகுதியில் வைத்து வேகமாக சென்றது.
இதில் துப்பாக்கி குண்டு காயமடைந்த ஏடிஎம்மில் பணம் நிரப்பும் ஊழியர்களான கிரி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். சிவக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே தான் இந்த சம்பவம் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்துள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர்.
அந்த வீடியோவில் ஊழியர்கள் 2 பேரை முகமூடி அணிந்து துப்பாக்கியால் சுட்டு 2 பேர் பணப்பெட்டியை தூக்கி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி கொள்ளையர்கள் 2 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications