பெங்களூர் வங்கியில் இப்படியும் சம்பவம்.. தங்க நகை அடகு வைத்த அத்தனை பேருக்கும் பெரிய ட்விஸ்ட்
பெங்களூர்: தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெறுவதற்காக வங்கிகளை மக்கள் நாடுககிறார்கள். ஆனால் அந்த வங்கியில் நீங்கள் அடகு வைத்த நகை பாதுகாப்பாக இல்லை என்றால் என்னாகும். அதுவும் வங்கி மேலாளரே நகையை திருடி விற்றுவிட்டால் என்னாகும்.. அப்படியான ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த ரூ. 4 கோடி தங்க நகைகளைத் திருடிய வங்கி உதவி மேலாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்றைக்கு பொதுத்துறை வங்கிகளில் தான் மக்கள் நகைகளை அடகு வைக்க ஆர்வம் காட்டுகிறார்கள். நகைகளை அடகும் வைக்கிறார்கள். அப்படி அடகு வைக்கும் நகைகளை சில வங்கி ஊழியர்கள் திருடுவது , மோசடி செய்வது நடக்கிறது. அப்படியான சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

பெங்களூரு கிரிநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்தியன் வங்கி கிளை இருக்கிறது. அங்கு உதவி மேலாளராக கிரண்குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அங்கு கடந்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி வாடிக்கையாளர் ஒருவர் அடமானம் வைத்த தங்க நகையை மீட்பதற்காக வந்துள்ளார் அப்போது அவர் அடமானம் வைத்திருந்த தங்க நகைகள் லாக்கரில் இல்லாமல் மாயமாகி இருப்பதை கண்டு ஆடிப்போனார்.
இதுபற்றி வங்கி மேலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனே அவர், லாக்கரை திறந்து பார்த்த போது வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த ஏராளமான நகைகள் திருட்டுப் போய் இருந்ததை கண்டார். இதையடுத்து, வாடிக்கையாளர்கள் கடந்த ஓராண்டாக அடகு வைத்த நகைகளின் விவரங்கள் குறித்துப் பரிசீலனை நடத்துவதற்கு ஒரு குழுவை உடனே வங்கி மேலாளர் அமைத்தார்.
அந்த குழுவினர் நடத்திய பரிசீலனையில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த 2 கிலோ 783 கிராம் தங்க நகைகள் திருட்டுப்போய் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தங்க நகைகள் வைக்கப்படும் லாக்கருக்கு 2 சாவிகள் உண்டு. அதில், ஒன்று மேலாளரிடமும், மற்றொரு சாவி உதவி மேலாளரான கிரண்குமாரிடமும் இருப்பது வழக்கம். இதனால் கிரண்குமார் மீது மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த விவரம் குறித்து கிரிநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கிரண்குமாரைப் பிடித்து விசாரித்த போது தங்க நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, கிரண்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
வங்கி துணை மேலாளர் கிரண்குமார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் பணியில் சேர்ந்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தாராம். ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சத்தை கிரண்குமார் இழந்துள்ளார். இதையடுத்து, கடனை அடைக்கவும், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடவும் கிரண்குமாருக்கு பணம் தேவைப்பட்டதாம்.
இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த தங்க நகைகளை ஒவ்வொரு பாக்கெட்டாக திருடத் தொடங்கினார். இவ்வாறு திருடும் நகைகளைத் தனியார் நிதி நிறுவனங்களில் அவர் அடமானம் வைத்துப் பணத்தைப் பெற்று வந்தாராம். அந்தப் பணத்தைத் தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கிரண்குமார் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.
ஒட்டுமொத்தமாக வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த 2 கிலோ 783 கிராம் தங்க நகைகளை கிரண்குமார் திருடி, நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்ததுடன், விற்பனையும் செய்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 4 கோடியே 12 லட்சமாகும். தன்னிடம் இருந்த மாற்று சாவியைப் பயன்படுத்தி இந்த திருட்டை கிரண்குமார் அரங்கேற்றி இருந்தார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் வங்கியில் திருடிய 700 கிராம் தங்க நகைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர். கிரண்குமார் திருடிய மீதி தங்க நகைகளை மீட்டு வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லோகேஷ் தெரிவித்துள்ளார். கைதான கிரண்குமாரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications