பெங்களூர் ஏர்போர்ட்டை சுற்றும் போலி டாக்சிகள்! நள்ளிரவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! மக்களே ஜாக்கிரதை
பெங்களூர்: தனியாக பயணிக்கும் பெண்களை குறிவைத்து அவர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் பெங்களூர் விமான நிலையத்தில் நடந்துள்ளது. அங்கு ஏர்போர்ட்டில் பெண் பயணி ஒருவரை ஏற்றி சென்ற டாக்ஸி டிரைவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
பெங்களூர் ஏர்போர்ட்டில் நள்ளிரவில் வந்து இறங்கிய அந்த பெண் ஓலா செயலியில் டாக்ஸி புக் செய்துள்ளார். ஏர்போர்ட்டில் வழக்கமாக டாக்ஸி வரும் இடத்தில் அவர் காத்திருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ஒரு டாக்சி டிரைவர் தன்னை ஓலா டிரைவர் என்பது போல கூறியிருக்கிறார். அதை நம்பி அந்த பெண் டாக்சியில் ஏறிய நிலையில், பாதி வழியில் அதிக பணம் பறிக்க முயன்றார். அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உடனடியாக போலீசுக்கு கால் செய்துள்ளார். போலீசார் துரிதமாக செயல்பட்டதில் அந்த பெண் தப்பி இருக்கிறார்.
தனக்கு நேர்ந்ததை அந்த பெண் ட்விட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அன்று இரவு 10:30 மணியளவில் அவர் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியுள்ளார். அங்கிருந்த ஓலா டாக்சியை புக் செய்துள்ளார். பிறகு கொஞ்ச நேரத்திலேயே ஒரு டாக்சி அருகில் வந்து நின்றுள்ளது. தான் புக் செய்த ஓலா தான் என நினைத்து அவரும் ஏறிவிட்டார்.
என்ன நடந்தது: ஆனால், டிரைவர் ஓடிபியை கேட்கவில்லை. மேலும், தனது மொபைலை அந்த பெண்ணிடம் கொடுத்து எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அதை பதிவிட சொல்லி இருக்கிறார். ஏன் ஓலா செயலியை யூஸ் செய்யவில்லை என்று அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் தனது செயலி வேலை செய்யவில்லை என்று சொல்லி சமாளித்துள்ளார். இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே கூடுதல் கட்டணம் தர வேண்டும் என டிரைவர் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண் மறுக்கவே, "அப்படி என்றால் வேறு ஒரு டாக்சியில் ஏற்றிவிடுகிறேன். அதில் ஓலா கட்டணம் கொடுத்து பயணித்துகொள்ளுங்கள்" என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். இதனால் பயந்த அந்த பெண், தன்னை ஏற்றிய ஓலா பிக்அப் பாயிண்டிலேயே இறக்கிவிடும்படி சொல்லி இருக்கிறார். இருப்பினும், அதை கண்டுகொள்ளாத டிரைவர், பெட்ரோல் நிலையத்தில் வண்டியை நிறுத்தி ரூ.500 கேட்டு வாங்கி இருக்கிறார்.
கைது: பெண் தொடர்ந்து வலியுறுத்தியதை தொடர்ந்து ஓலா பிக்அப் நிலையத்தில் டிராப் செய்ய அந்த டிரைவர் ஒப்புக்கொண்டு இருக்கிறார். அதற்குள் அந்த பெண் போலீசாருக்கும் தனது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டார். 20 நிமிடங்களில் அந்த கார் ஓலா பிக்அப் ஸ்டாண்டிற்கு வந்த நிலையில், அதற்குள் துரிதமாக செயல்பட்ட போலீசார், அந்த நபரை கைது செய்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த நபர் பசவராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். போலீசார் தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
தொடரும் சம்பவங்கள்: தனக்கு நேர்ந்த இந்தச் சம்பவத்தை அந்த பெண் ஆன்லைனில் பகிர்ந்த நிலையில், பலரும் தங்களுக்கும் இதுபோல நடந்துள்ளதாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். பெங்களூர் ஏர்போர்ட்டில் இரவு நேரங்களில், அதுவும் பெண்களை குறிவைத்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிக பணத்தை பறிக்கவே இதுபோல டிரைவர்கள் செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், ஏர்போர்ட்டில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications