Bangalore: அதிகாலை 2 மணி.. அயர்ந்து தூங்கிய பயணிகள்! பஸ் ஓட்டும் போது பெங்களூர் டிரைவர் செய்த காரியம்
பெங்களூர்: கர்நாடக மாநில பேருந்து ஒன்றில் அதிகாலை 2 மணியளவில், மின்னல் வேகத்தில் பேருந்தை இயக்கிய டிரைவர், கூடவே தனது செல்போனில் சீரியல் பார்த்துக்கொண்டு இருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பயணிகள் உயிரை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பெங்களூர் பஸ் டிரைவர் செய்த காரியம் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டும் இன்றி, உலக அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. பெங்களூரை பொறுத்தவரை அங்குள்ள சாலைகள் கொஞ்சம் குறுகலானவை. அதுவும் போக, பெங்களூர் இந்தியாவின் ஐடி நகரம் என்று அழைக்கப்படுகிறது.

பெங்களூர் சாலைகள்
ஏனெனில் பெங்களூரில் அந்த அளவிற்கு ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ளன. இதனால், பெங்களூர் நகருக்குள் காலை, மாலை பீக் நேரங்களில் மட்டும் இன்றி பிற நேரங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சில கிலோமீட்டர் தொலைவை கடக்கவே மணிக்கணக்காக ஆகிறது என்று வாகன ஓட்டிகள் வலைத்தளங்களில் ஆதங்கம் தெரிவிப்பதை பார்க்க முடிகிறது.
அதே நேரத்தில் பெங்களூரு சாலைகளில் வாகன ஓட்டிகள் விதிகளை மீறி, போக்குவரத்துக்கு மேலும் இடையூறு அளிக்கின்றனர். கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்ப்பது, காருக்குள் சில்மிஷங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களால் சாலைகளில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
அதிகாலை 2 மணியளவில்
இப்படி மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசலால் தினந்தோறும் அவதிப்படும் பெங்களூரில், பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் வீடியோ பார்த்தபடி வாகனத்தை இயக்கிய காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாவது:-
பரவும் வீடியோ
One of the reason for Accidents 🤯💀 pic.twitter.com/4TjoE3raMY
— Nand@n (@nandantwts) November 6, 2025
கர்நாடக மாநில பதிவெண் கொண்ட பேருந்து ஒன்றில் டிரைவர், ஸ்பீடோமீட்டரில் செல்போனை வைத்தபடி வண்டியை அதிவேகமாக இயக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பேருந்தில் பயணித்த பயணி ஒருவர்தான் இந்த வீடியோவை எடுத்துள்ளார். வண்டியை 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கியபடி, வீடியோவும் பார்த்துக்கொண்டு அந்த டிரைவர் ஓட்டியதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நெட்டிசன்கள் கண்டனம்
"விபத்துக்கு இதுவும் ஒரு காரணம்" என்ற கேப்ஷனுடன் இந்த பதிவை அந்த நெட்டிசன் பகிர்ந்த நிலையில், அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் பேருந்து டிரைவரின் செயலை கண்டித்துள்ளனர். "பயணிகளின் உயிரை பணயம் வைத்து இப்படி நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளனர்.
ஒரு நெட்டிசன் கூறுகையில், "டிரைவர் மீது நம்பிக்கை வைத்து அனைத்து பயணிகளும் தங்கள் பயணத்தை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், டிரைவரோ ரொம்ப அஜாக்கிரதையாக இருக்கிறார்," என்று பதிவிட்டுள்ளார்.
மொபைல் லாக் சிஸ்டம்
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "பேருந்து இயக்கும் போது மொபைல் பயன்படுத்த முடியாதபடி மொபைல் லாக் சிஸ்டம் வேண்டும். அப்போதுதான் டிரைவர்கள் செல்போன்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க முடியும்," என்று கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "தொலைதூர பஸ்களில் டிரைவர்களுக்கு தனியாக காக்பிட் அறை போல ஒரு இடம் உள்ளது. இதனால் டிரைவர்களின் செயல்பாட்டை பயணிகளால் தெரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற தடுப்பு கதவுகள் இருப்பதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் டிரைவர் அச்சத்துடன் பொறுப்புடன் வாகனத்தை ஓட்டுவதோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்," என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications