கொஞ்சம் கூட திட்டமிடாத கர்நாடக அரசு.. ஆர்சிபி ரசிகர்கள் கூட்ட நெரிசலில் பலியான பின்னணி இதுதான்
பெங்களூர்: பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (stampede) பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு வரை ஆர்சிபி (RCB) ரசிகர்கள் நகரம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதால், போலீசார் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அதிகாலை 5 மணிக்குதான் வீடுகளுக்கு சென்றனர். ஆனால், பழையபடி காலை 9 மணிக்கே அவர்கள் மீண்டும் பாதுகாப்பு பணிக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
நிர்வாக பிழை, பாதுகாப்பு குறைபாடு
இந்நிலையில், மதியம் 1 மணிக்கெல்லாம் ரசிகர்கள் விதான சவுதா, சின்னசாமி ஸ்டேடியம் பகுதிக்கு திரண்டனர். கூட்டம் அதிகமாகும் என்பதை உளவுத்துறை வழியாக முன்னதாகவே தெரிந்திருந்தும், கர்நாடக அரசு வீரர்கள் ஊர்வலத்திற்கு தடை விதிக்கவில்லை. இதனால், கூட்ட நெரிசல் கட்டுப்பாடுகளை அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை
கூட்ட நெரிசலில் பலர் மிதிபட்டு விழுந்தனர். அவசர சேவை ஆம்புலன்சுகள் கூட உள்ளே செல்ல முடியாத அளவுக்கு மோசமான நிர்வாகம் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால், பலர் உயிரிழப்பும், பலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன.
அரசின் மெத்தனத்திற்கு கண்டனம்
இந்த சம்பவம் தொடர்பாக, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா, "கர்நாடக அரசின் மெத்தனமான நடவடிக்கையால் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆர்சிபி வெற்றியின் கிரெடிட்டை எடுக்க கர்நாடக காங்கிரஸ் அரசு போட்டி போட்டு செயல்பட்டதால்தான் இப்படி நடந்துள்ளது. எனவே, அரசு மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

விசாரணை கோரிக்கை
உளவுத்துறை தகவலையும், போலீசாரின் ஓய்வில்லா பணியையும் அரசு உரிய முறையில் கவனிக்காததே இந்த துயர சம்பவத்திற்கு காரணமாகும் என பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. சம்பவம் தொடர்பாக விரைவில் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.
முன்னதாக, துணை முதல்வர் டிகே சிவகுமார், ஹெச்ஏஎல் விமான நிலையம் சென்று, வீரர்களை வரவேற்று, அவர்கள் கையில் கர்நாடக கொடியை கொடுத்ததோடு, ஆர்சிபி கொடியை தான் தூக்கியபடி காரில் வந்து பந்தா செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications