பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்?
இந்தியாவின் சிலிகான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநகரில் வாடகை வீட்டில் வசித்து வரும் மக்களுக்கு புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. ஏற்கனவே விண்ணைத் தொடும் அளவிற்கு எகிறிக்கொண்டிருக்கும் வீட்டின் வாடகை, பல மாத அட்வான்ஸ் தொகை (Security Deposit) எனப் பொருளாதார ரீதியாக அல்லல்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு தற்போது புதிய தலைவலி ஒன்று கிளம்பியுள்ளது.
பெங்களூரில் உள்ள பல வீட்டு உரிமையாளர்கள் தங்களின் வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களை மிகக் குறுகிய காலக் கெடுவிற்குள் திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லி நிர்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

பெங்களூரில் பல வீட்டு ஓனர்கள் 'வெளிநாட்டிலிருந்து மகன் வர்றான்', தங்களின் சொந்த பந்தங்கள் அல்லது வெளிநாட்டில் இருக்கும் குடும்பத்தினர் திடீரென ஊருக்குத் திரும்புகின்றனர், தங்களின் சொந்தத் தேவைக்கு வீடு தேவைப்படுகிறது அல்லது வீட்டை விற்கப் போகிறோம் எனப் பலவிதமான சொந்தக் காரணங்கள் கூறி குடியிருப்போரை வீட்டை காலி செய்ய சொல்வதாக சமூக வலைதளங்களில் மக்கள் தங்களுக்கு நேர்ந்த துயரங்களை வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், அப்படிக் காலி செய்யப்பட்ட வீடுகள் சில நாட்களிலேயே, பழைய வாடகையை விட கூடுதல் வாடகைக்கு புதிய நபர்களுக்கு ஆன்லைனில் விளம்பரம் செய்யப்படுவது தான் இங்கு நடக்கும் கூத்து.
பெங்களூரில் வீட்டு வாடகை பெரிய அளவில் அதிகரித்து வரும் வேளையில், எப்படியாவது கூடுதல் லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில், வீட்டு ஓனர்கள் இத்தகைய வேலையை செய்கின்றனர்.
இத்தகைய சம்பவத்தால் பெங்களூரில் ஐடி துறையில் வேலை பார்க்கும் வெளிமாநில இளைஞர்களும், மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகத் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலைக்கா பெங்களூரு வந்த ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நகரின் மிக முக்கிய பகுதியான ஒயிட்ஃபீல்டு (Whitefield), மரத்தஹள்ளி, ஹெச்எஸ்ஆர் லேஅவுட், பெல்லந்தூர் மற்றும் கோரமங்களா போன்ற அதிக தேவையுள்ள ஐடி காரிடார் பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் அறங்கேறி வருகிறது.
சட்ட ரீதியாகப் பார்க்கும்போது ஒரு சொத்தின் உரிமையாளருக்குத் தனது சொந்தத் தேவைக்காகத் தனது வீட்டைத் திரும்பப் பெறும் முழுமையான சட்ட உரிமை உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், சொல்லப்படும் சொந்தக் காரணங்கள் பலவும் வெறும் போலியானவை என்பதும், வாடகையை உயர்த்துவதற்காக மட்டுமே இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படுவதும் எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி தான் மக்களிடம் உள்ளது.












Click it and Unblock the Notifications