ஸ்டைலா, கெத்தா வந்துச்சே! அந்த நாய் ரூ 50 கோடிலாம் இல்லை! ED ரெய்டில் சிக்கிய பெங்களூர் சதீஷ்!
பெங்களூர்: பெங்களூரில் ரூ 50 கோடி மதிப்பிலான நாயை வளர்த்து வந்ததாக பெருமை பொங்க சொன்னவரின் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்திய போதுதான் அந்த நாய் 1லட்சத்திற்கும் குறைவானது என தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பெங்களூரை சேர்ந்தவர் சதீஷ் (51). இவர் 50 கோடி ரூபாய்க்கு நரி இனமான அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாயை வாங்கியதாக அறிவித்திருந்தார். மேலும் உலகிலேயே தனது நாய்தான் அதிக விலைக்கு வாங்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

ஓநாய் வகை
அந்த நாய் ஓநாய்- காசஷியன் ஷெப்பர்டு கலப்பு இனம் என்றும் கூறினார். மேலும் தன்னை இந்திய நாய்கள் இனவிருத்தி சங்கத் தலைவர் என்றும் கூறிக் கொண்டார். இந்த நாயுடன் சதீஷ் வலம் வரும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதை வைத்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தனது ரூ 50 கோடி மதிப்பிலான நாயுடன் கலந்து கொண்டு பணம் சம்பாதித்தது தெரியவந்தது. மேலும் தனது 7 ஏக்கர் பண்ணை நிலத்தில் பல்வேறு அரிய வகை நாய்களை வைத்திருப்பதாகவும் இஷ்டத்திற்கு அளந்துவிட்டார்.
பணக்காரர்
உடனே யப்பா, நாயையே 50 கோடிக்கு வாங்கியிருக்கிறார் என்றால் அவர் எத்தனை பெரிய கோடீஸ்வரன் என பேசப்பட்டு வந்தது. மேலும் தான் ஒரு பணக்காரர் என்பதையே சதீஷ் அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த நாயை பார்க்கும் மக்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்.
ரூ 50 கோடிக்கு நாயா
மேலும் ஒரு நாயே ரூ 50 கோடி என்றால் பண்ணையில் அவர் வைத்திருப்பதாக சொல்லும் அரிய வகை நாய்கள் எல்லாம் எவ்வளவு ரேட் இருக்கும். அது மட்டுமா, நாய்களை பராமரிக்கும் செலவு, அதற்கான வசதிகள், தங்குமிடம், உணவு உள்ளிட்டவைகளுக்கெல்லாம் நாளொன்றுக்கு எவ்வளவு செலவாகும் என இவர்களே கணக்கு போட ஆரம்பித்தனர்.
அரை மணி நேரத்திற்கு எவ்வளவு
இது போல் அவரை கைப்புள்ளைய போல் உசுப்பேற்றிவிட்டனர். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கெத்தாக நாயுடன் வருவதும் பணம் சம்பாதிப்பதுமாக அந்த நபர் இருந்தார். அதாவது அரை நிமிட நிகழ்ச்சிக்கு ரூ 2.46 லட்சமும், அதற்கு மேல் நிகழ்ச்சி நடந்தால் ரூ 10 லட்சமும் கட்டணமாக வசூலித்து வந்தார்.
பண்ணை வீட்டில்
அது போல் தனது பண்ணை வீட்டில் நாய்களை பராமரிக்க சிசிடிவி கேமராக்கள் , 10 அடி உயர சுவரை எழுப்பியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் அமலாக்கத் துறையினர் நேற்று காலை அவருடைய வீட்டிற்கு சோதனை நடத்த சென்றிருந்தனர்.
வங்கிக் கணக்கு
அப்போது அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்த போது அவர் இந்த நாயை ரூ 50 கோடிக்கு வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. ஒரு வேளை ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பாரோ என்ற சந்தேகத்தின் பேரில் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
ரூ 50 கோடி இல்லை
அப்போது அவர், சார் அந்த நாய் ரூ 50 கோடிக்கு வாங்கினேன் என நான் சொன்னது பொய் என தெரிவித்தார். மேலும் அந்த நாய் தன்னுடையது அல்ல என்றும் பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமானது. அது வெளிநாட்டு நாய் இல்லை, இந்திய இனம்தான். அதன் விலை ரூ 1 லட்சத்தை விட குறைவானது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் பொய் தகவல் பரப்பியது தொடர்பாக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications