"பெங்களூர் சாலைக்கு சரோஜா தேவி பெயர்.." கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூர்: பழம்பெருமை நடிகையான சரோஜா தேவி தனது 87வது வயதில் வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு நேற்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதற்கிடையே சரோஜா தேவி வசித்த மல்லேசுவரம் 11-வது கிராஸ் சாலைக்கு அவரது பெயர் சூட்ட ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
பழம்பெருமை நடிகையான சரோஜா தேவி தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் 200+ படங்களில் நடித்துள்ளார். 1938ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்த சரோஜா தேவி 19550கள் முதல் 1970கள் வரையில் தென்னிந்தியச் சினிமாவில் முக்கிய நடிகையாகவே வலம் வந்தார். அந்தக் காலத்தில் இவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.

கடந்த சில காலமாகவே அவர் வயது மூப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இதற்கிடையே 87 வயதான சரோஜா தேவி நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு நேற்றைய தினம் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
இதற்கிடையே பெங்களூரில் சரோஜா தேவி வசித்த மல்லேசுவரம் 11-வது கிராஸ் சாலைக்கு சரோஜாதேவியின் பெயர் சூட்ட ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "நான் அவரை இதற்கு முன்பு பலமுறை சந்தித்திருக்கிறேன். எங்குச் சந்தித்தாலும், அவர் எப்போதும் மிகுந்த பாசத்துடனும், கனிவுடனும் பேசினார்.
அவர் ஒரு அற்புதமான ஆளுமை கொண்ட நடிகை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவரது இல்லம் அமைந்துள்ள மல்லேஸ்வரத்தில் உள்ள 11வது கிராஸுக்கு பி.சரோஜாதேவியின் பெயரைச் சூட்டும் திட்டம் இருக்கிறது. அது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார்.
சரோஜாதேவி தனது கன்னடத் திரைப்படமான 'மகா கவி காளிதாசா' (1955) மூலம் அறிமுகமானார். தமிழில் "திருமணம்" (1956) என்ற மூடம் அறிமுகமான அவர் 1970களின் பிற்பகுதி வரை படங்களில் நடித்தார். குறிப்பாக 1958ல் வெளிவந்த 'நாடோடி மன்னன்' படம் அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நிலை நிறுத்தியது.
பொதுவாக அந்தக் காலத்தில் நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுவார்கள். ஆனால், சரோஜா தேவிக்கு 1967இல் திருமணம் நடந்த நிலையில், அவர் 1974 வரை தமிழ்ப் படங்களில் முன்னணி நடிகையாகவே வலம் வந்தார். 1970களில் இறுதி வரையும் அவர் திரைப்படங்களில் தீவிரமாகவே நடித்து வந்தார்.












Click it and Unblock the Notifications