பெங்களூரில் கொடூரம்.. ”உங்க மகளை கொன்று சூட்கேசில் வச்சுருக்கேன்” மாமியாருக்கு போன் செய்த என்ஜினீயர்
பெங்களூர்: பெங்களூரில் கட்டிய மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் திணித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மாமனார் மாமியாருக்கு போன் செய்து உங்க பொண்ணை கொலை செய்துவிட்டேன், உடலை சூட்கேசில் வைத்துள்ளேன் என்று தகவல் கூறிவிட்டு தப்பி சென்ற சாப்ட்வேர் என்ஜினீயரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கணவன் மனைவி இடையே ஏற்படும் சில சண்டைகள் கடைசியில் கொலையில் முடிந்துவிடுகிறது. பின்னர் கொலையை மறைக்க நினைத்து உடலை துண்டு துண்டாக வெட்டி பாத்ரூமில் போடுவது, சூட்கேசில் அடைத்து ஆற்றுப்பாலத்தில் போடுவது என அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன. ஏற்கனவே பெங்களூரில் மனைவியை கொன்று உடலை பிரிட்ஜில் அடைத்துவைத்து என்ஜினீயர் சிக்கிய சம்பவம் அரங்கேறியிருந்தது.

வீட்டில் இருந்தே வேலை செய்த கணவன் - மனைவி
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் இதேபாணியில் அரங்கேறியுள்ளது பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டிய மனைவி என்றும் பாராமல் கத்தியால் குத்தி கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 35). இவரது மனைவி கவுரி (32). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் வந்த தம்பதியினர், உளிமாவு காவல் நிலையத்துக்கு உட்பட்ட தொட்டகம்மனஹள்ளி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். ராகேஷ் - கவுரி தம்பதி இருவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர் என்பதால் இருவருமே வொர்க் ப்ரம் ஹோமில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்தனர்.
மாறி மாறி வாக்குவாதம்
ராகேஷ் கவுரி தம்பதிக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும், குழந்தைகள் இல்லை. தம்பதி இருவர் மட்டுமே வசித்து வந்ததால், அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடக்கும். பின்னர் சண்டை சரியாகிவிடும். அதன்படி நேற்று முன் தினம் இரவும் தம்பதி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாறி மாறி இருவரும் பேசியிருக்கின்றனர். அப்போது ஆத்திரமடைந்த ராகேஷ், கவுரியை கத்தியால் குத்தினார்.
கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ராகேஷ், கொலை கேஸில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக கொலையை எப்படியாவது மறைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். உடலை சூட்கேஸில் அடைத்து யாருக்கும் தெரியாமல் வெளியில் கொண்டு போய் போட்டுவிடலாம் என்று நினைத்துள்ளார்.

உங்க மகளை கொன்று சூட்கேசில் அடைத்துவிட்டேன்
ஆனால் முழு உடலும் சூட்கேசுக்குள் போகாது என்பதால், மனைவியின் உடலை துண்டு துண்டாக கூறு போட்டுள்ளார். பின்னர் சூட்கேசில் திணித்து அடைத்துக்கொண்டார். ஆனாலும் துர்நாற்றம் வீசும் என்பதால் அவரால் வெளியே கொண்டு செல்ல முடியவில்லை. இதன்பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர், தன் நண்பருக்கு போன் செய்து என் மனைவி தற்கொலை செய்துவிட்டதாக கூறியிருக்கிறார். அப்போது அவரது நண்பர் பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.
உடலை வெளியே கொண்டு போட்டுவிட்டாலும் மனைவி எங்கே என்று என்னிடம் தான் கேட்பார்கள். இதனால் எப்படியும் மாட்டிவிடுவோம் என்று நினைத்த ராகேஷ் இதற்கு மேல் உண்மையை மறைக்க முடியாது என்று நினைத்து, கவுரியின் தாய் தந்தையிடம் சொல்லிவிடலாம் என்று முடிவு எடுத்தார். அதன்படி நேற்று மகாராஷ்டிராவில் இருக்கும் கவுரியின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் போன் செய்து, "நான் உங்கள் மகளை கொன்று விட்டேன். உடலை வெட்டி சூட்கேசில் அடைத்து வைத்திருக்கிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தார்.
கதவை உடைத்து வீட்டுக்குள் சென்ற போலீசார்
இதனால் துடிதுடித்துப்போன பெற்றோர், கதறி அழுதபடி உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து மகாராஷ்டிரா போலீசார், உளிமாவு காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று போலீசார் பார்த்தனர். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று போலீசார் பார்த்தனர். அப்போது சூட்கேசுக்குள் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்திற்கு தடயவியல் பரிசோதனை குழுவினரும் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். ராகேஷ் அங்கு இல்லை. தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. ராகேஷின் செல்போனுக்கு கால் செய்த போது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த உளிமாவு போலீசார் ராகேஷை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தலைமறைவான ராகேஷ்
முன்னதாக பெங்களூர் தென் கிழக்கு மண்டல உதவி போலீஸ் கமிஷனர் சாரா பாத்திமா சம்பவ இடத்தில் வந்து ஆய்வு செய்தார். அக்கம் பக்கத்தினரிடம் இவர்கள் பற்றி விசாரித்தார். போலீசார் தரப்பில் கூறுகையில், "ராகேஷ் கவுரி தம்பதி மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் இங்கு வந்திருக்கிறார்கள். இரண்டு பேருமே கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் என்பதால், வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்திருக்கிறார்கள். அவ்வப்போது அவர்கள் இடையே சிறுசிறு சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
அப்படித்தான் நேற்று முன் தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஆத்திரம் தலைக்கேறியதில் மனைவியை ராகேஷ் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார். தற்போது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. அவரை எதற்காக கொலை செய்தார் என்பது பின்னர் தான் தெரியவரும். தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறோம்" என்று கூறினர்.
காதலியை கொன்று பிரிட்ஜில் அடைத்த காதலன்
ஏற்கனவே பெங்களூரில் வயாலிகாவலில் இதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி இருந்தது. தன் முன்னாள் காதலி ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டார் என்ற ஆத்திரத்தில் வீட்டில் தனியாக இருந்த காதலியை துண்டு துண்டாக வெட்டி உடலை பிரிட்ஜில் அடைத்து வைத்துவிட்டு தப்பி சென்றிருந்தார். அந்த பெண் பெங்களூரின் வயாலிகாவலில் கணவரை பிரிந்து வசித்து வந்த மகாலட்சுமி என்பதும், கொலை செய்தது அவரது முன்னாள் காதலன் முக்தி ரஞ்சன் என்பதும் தெரியவந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் வெளியே தெரிய வந்தது. ஆனால் பல நாட்களுக்கு முன்பே இவர் கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தபட்ட நிலையில், முக்தி ரஞ்சன் சொந்த ஊரான ஒடிசா தப்பி சென்றது தெரியவந்தது. அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அவரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications