கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சிக்கல்.. நில முறைகேடு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் அதிரடி
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவிக்கு எதிரான மூடா நில முறைகேடு வழக்கை லோக் ஆயுக்தா போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ய பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சித்தராமையா மற்றும் அவரது மனைவி குற்றமற்றவர்கள் என்று லோக் ஆயுக்தா போலீசார் அறிக்கை தாக்கல் செய்திருந்த நிலையில், மீண்டும் விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் சித்தராமையாவுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். இவரது மனைவி பார்வதி. பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் (மூடா) நிறுவனமானது 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில், சட்டவிரோதமாக இந்த 14 வீட்டு மனைகளும் ஒதுக்கப்பட்டதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியது.

மூடா முறைகேடு வழக்கு
இதற்கு விளக்கம் அளித்த சித்தராமையா தரப்பு, 14 வீட்டு மனைகளும், பார்வதியின் நிலத்தை முடா நிறுவனம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததன் காரணமாக நஷ்ட ஈடாக தரப்பட்டது என்று விளக்கம் அளித்தது. எனினும் இதனை ஏற்காத பாஜக சார்பில் இது தொடர்பாக கர்நாடக ஆளுநரிடமும் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் அனுமதி அளித்ததை அடுத்து, சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அதன்பேரில் மைசூர் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதனை தொடர்ந்து மூடா நில முறைகேட்டு வழக்கில், சித்தராமையா மற்றும் அவரது மனைவி குற்றமற்றவர்கள் என்று கூறி பெங்களூர் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மைசூர் லோக் அயுக்தா போலீசார் பி அறிக்கை தாக்கல் செய்தனர். இதனால் சித்தராமையா நிம்மதி பெருமூச்சு அடைந்தார்.
நீதிமன்றம் தீர்ப்பு
எனினும், லோக் ஆயுக்தா போலீசார் அறிக்கைக்கு சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறையும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தான், நில முறைகேடு வழக்கில் லோக் ஆயுக்தா போலீசாரின் அறிக்கைக்கு தடை விதிக்கும்படி பெங்களூர் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் சினேகமயி கிருஷ்ணா மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சந்தோஷ் கஜனன பட் முன்பு நடந்து வந்தது. விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று இந்த வழக்கின் கோர்ட் தீர்ப்பு கூறியது. கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவிக்கு எதிரான மூடா நில முறைகேடு வழக்கை லோக் ஆயுக்தா போலீசார் தொடர்ந்து மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.
சித்தராமையாவுக்கு நெருக்கடி?
லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் பதவியை கைப்பற்ற டிகே சிவக்குமார் ஆர்வம் கட்டுவதாக அம்மாநில அரசியலில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், சித்தராமையாவுக்கு எதிரான நீதிமன்றத்த்தின் உத்தரவுக்கு அவருக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications