பெங்களூர் நெரிசல்.. ஜெயலலிதா வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன்!
பெங்களூர்: ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்ட விழா கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் தலைமை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நேர்மையான நீதிபதியாக அறியப்படும் இவர் தான் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர்.
பெங்களூர் நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் தலைமை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று சித்தரமையா அறிவித்துள்ளார். மைக்கேல் டி குன்ஹா என்ற பெயரை கேட்டதுமே எங்கேயோ பரிட்சயம் ஆன பெயர் போல தோன்றலாம்..

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு
ஆம் நீங்கள் நினைப்பது சரிதான்.. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தவர் இந்த நீதிபதிதான். ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர் டி குன்ஹா. ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பினை அளித்த நீதிபதி டி குன்ஹா அதன்பிறகு நாடு முழுவதும் பிரபலமாக அறியப்பட்டவர் ஆனார். அதேபோல, கர்நாடகவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் பாஜக ஆட்சி காலத்தில் கொரோனா உபகரணங்கள் வாங்குவதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக குன்ஹா தான் நியமிக்கப்பட்டார்.
நேர்மையான நீதிபதி
2002 ஆம் ஆண்டு ஆண்டு மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட குன்ஹா, பெங்களூர், பெல்லாரி, தர்வாத் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பதிவாளராக குன்ஹா நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக 2016 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பில் இருந்து குன்ஹா ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு பல்வேறு விசாரணை கமிஷன்களின் ஆணையராக குன்காவை சித்தராமையா அரசு நியமித்து வருகிறது. மிகவும் நேர்மையான நீதிபதியாக அறியப்படும் மைக்கேல் டி குன்ஹாவை தற்போது பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரில் கூட்ட நெரிசல்
18வது ஐபிஎல் சீசன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. 18 வருடங்களாக இதற்காக காத்திருந்த ரசிகர்கள், பெங்களூர் அணி கோப்பையை வென்றதும் கொண்டாட ஆரம்பித்தனர். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடந்ததால், பெங்களூர் விதான சவுதா, சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று வெற்றி கொண்டாட்ட விழா நடந்தது.
இந்த விழாவின்போது ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு யார் காரணம், எங்கே தவறு நடந்தது என்பதை கண்டறிய கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் சித்தராமையா எடுத்து வருகிறார்.
அந்த வகையில் தான் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் போலீஸ் கமிஷனர் தயானந்த் உள்பட 5 போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications