கேரளா லாட்டரியில் கொட்டிய பண மழை.. ஆசை காட்டி பெங்களூர் பெண்ணிடம் லட்சக்கணக்கில் விபூதி அடித்த கும்பல்
திருவனந்தபுரம்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை (Bangalore - Kerala Lottery) சேர்ந்த பெண் ஒருவர், கேரளா லாட்டரி பெயரில் நடைபெற்ற மோசடியில் சிக்கி ₹11.8 லட்சம் பணத்தை பறிகொடுத்துள்ளார். பரிசுத்தொகை கிடைக்கும் என நம்ப வைத்து கட்டணங்கள் கேட்டு, போலி போலீஸ் அழைப்புகளால் அச்சுறுத்தி பணம் பறித்துள்ளனர். இந்த மோசடி எப்படி நடைபெற்றது? மோசடியாளர்கள் சிக்கினார்களா? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிகளுக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. அங்கு தினந்தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. அதுபோல பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு பல கோடி ரூபாய் பரிசளிக்கப்படுகிறது.

பெங்களூர் பெண்ணிடம் மோசடி
கேரளா லாட்டரிகளில் அவ்வப்போது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ஷ்டம் அடித்து பணம் கொட்டி விடுகிறது. இதனால், கேரளாவிற்கு செல்லும் வெளி மாநிலத்தவர்களும் லாட்டரிகளை விரும்பி வாங்குவதை பார்க்க முடிகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, லாட்டரிகளை வைத்து சமீப காலமாக மோசடிகளும் அதிக அளவில் நடப்பதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக, கேரளா லாட்டரிகளை ஆன்லைனில் விற்க அனுமதி கிடையாது என்றாலும் கூட, விவரம் தெரியாத சிலர் ஆன்லைன் லாட்டரி என்ற பெயரில் நடைபெறும் மோசடி வலைகளில் சிக்கி விடுகிறார்கள். இப்படியான ஒரு மோசடியில் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருக்கிறார். இது குறித்த விவரம் வருமாறு:-
ரூ.8 லட்சம் பரிசு அடித்துள்ளது
பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர்கள் கேரளா லாட்டரி அலுவலகத்தில் இருந்து போன் செய்வதாகவும், நீங்கள் வாங்கிய டிக்கெட்டிற்கு ரூ.8 லட்சம் பரிசு அடித்துள்ளது என்றும் கூறினர். பரிசுத்தொகையை பெற வேண்டும் என்றால் இந்த இணையதள முகவரிக்கு சென்று கிளைம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி, லாட்டரி இணையதளம் போலவே ஒரு இணையதள முகவரியை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர்.
யோசிக்காமல் பணம் அனுப்பினார்
அந்த இணையதளத்திற்கு சென்றதும், பரிசுத்தொகை வேண்டும் என்றால் ரூ.19,190 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும், அதன் பிறகு கூடுதல் கட்டணமாக ரூ.26,400 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. "அது தான் 8 லட்சம் பணம் வரப்போகிறதே... சில ஆயிரங்கள்தானே" என யோசிக்காமல் அந்த பெண் பணத்தை செலுத்தியுள்ளார்.
சிறிது நேரத்தில், "டெல்லி போலீசில் இருந்து பேசுகிறோம். உங்கள் பண பரிவர்த்தனை சட்டப்பூர்வமானது போன்று இல்லை. எனவே, நீங்கள் நேர்மையான நபர் என்பதையும், வெரிபிகேஷன் நடைமுறையை முடிக்க பணம் செலுத்த வேண்டும்" என்று மிரட்டியுள்ளனர்.
ரூ.12 லட்சம் மோசடி
இதனால் பயந்துபோன அந்த பெண், அவர்களுக்கும் பணம் கொடுத்துள்ளார். இப்படியாக 9 வங்கி கணக்குகளுக்கு பணம் அளித்த நிலையில், மொத்தமாக ₹11.80 லட்சம் இழந்துள்ளார். இதன்பிறகுதான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்த அந்த பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சைபர் கிரைம் மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications