கேஸுக்கான செலவை உங்க அப்பா கொடுப்பாரா.. பெண்ணுக்கு பளார் விட்ட டிரைவர்.. ஆக்ஷன் எடுத்த போலீஸ்
பெங்களூர்: கர்நாடாக மாநிலத்தில் ஓலா ஆட்டோ சவாரியை ரத்து செய்த பெண்ணின் கன்னத்தில் ஓட்டுநர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூர் மிகப்பெரிய தொழில் நகரமாக உள்ளது. இந்த நகரத்தில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இங்கு வந்து வேலை செய்கின்றனர். இங்கு பொதுமக்கள் பலரும் போக்குவரத்துக்காக ஆன்லைன் நிறுவனங்களின் வாடகை வாகனங்களை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மகாடி சாலை பகுதியில் பெண்கள் இருவர் ஆட்டோ சவாரிக்காக புக் செய்த நிலையில் சவாரியை கேன்சல் செய்துள்ளனர். இதனால், கடுப்பான ஆட்டோ ஓட்டுநர் பெண்களின் பின்னாலேயே துரத்திச் சென்று தகாத வார்த்தைகளைப் பேசியதோடு, கன்னத்தில் அறைந்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், மகாடி சாலை பகுதியில் பீக் ஹவரில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் ஓலா ஆட்டோவை புக் செய்துள்ளனர். எந்த ஆட்டோ முதலில் வருகிறதோ அதில் சென்று கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர். அப்போது, புக் செய்த முதல் ஆட்டோ வந்த நிலையில் அந்த ஆட்டோவில் இருவரும் ஏறியுள்ளனர். பின்னர் மற்றொரு ஆட்டோ சவாரியை கேன்சல் செய்துள்ளனர்.
இந்நிலையில், அந்த ஆட்டோ அவர்களது பின்னால் வந்து அதே சமயத்தில் நின்றுள்ளது. இதையடுத்து, அப்பெண்களின் செயலைப் புரிந்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர் கடும் ஆத்திரமடைந்தார். இதையடுத்து, அந்த ஆட்டோவின் பின்னாலேயே சென்று சவாரியை கேன்சல் செய்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இவ்வளவு தூரம் வந்து செலவான கேஸுக்கான செலவை உங்க அப்பா கொடுப்பாரா என்று கடும் வார்த்தைகளால் திட்டியதோடு, அப்பெண்ணின் செல்போனையும் பறிக்க முயன்றுள்ளார். போலீஸ் ஸ்டேஷன் போகலாம், ஆட்டோவில் ஏறுங்கள் என்று கூறி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்த அந்தப் பெண் அதனை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அந்தப் பதிவில் பெங்களூரில் சாதாரண சவாரியை கேன்சல் செய்ததற்காக உங்களுடைய ஆட்டோ ஓட்டுநரால் நான் நேற்று கடும் தாக்குதலுக்கு உள்ளானேன். இதுகுறித்து புகார் அளித்த நிலையிலும் உங்கள் கஸ்டமர் சப்போர்ட் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வீடியோ பதிவைப் பார்த்த போக்குவரத்து சாலை பாதுகாப்பு கூடுதல் தலைமை இயக்குநர் அலோக் குமார், சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த ஆட்டோ ஓட்டுநரை மாகடி சாலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், ஓலா நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பதிவிற்கு பதில் பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவில், இச்சம்பவமும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications