பெங்களூர் விமான நிலையத்தில் மின்னிய.. 896 நட்சத்திரங்கள்! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பெங்களூர்: பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு 896 நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மலேசியன் ஏர்லைன்ஸ் (MH193) விமானம் மூலம் கோலாலம்பூருக்கு செல்ல திட்டமிட்டிருந்த அவர், தனது உடமைகளுக்குள் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளுக்குள் ஆமைகளை மறைத்து வைத்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து சுங்கத்துறை அதிகாரகள் கூறுகையில், "தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் முகமது காசிம் எனும் பயணியின் உடமைகளிலிருந்து நாங்கள் 896 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்திருக்கிறோம். பயணி விமான நிலையத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
காசிம் இரவு 10 மணியளவில் விமான நிலையத்திற்குள் நுழைந்தார். நண்பகல் நேரத்தில் தனக்கு ஆபத்து வரலாம் என உணர்ந்ததும், அவர் தனது உடைகளை மாற்றிக்கொண்டு அதிகாரிகளை திசைதிருப்பிவிட்டு, தவறுதலாக டெர்மினல் 2-க்குள் நுழைந்துவிட்டதாகக் கூறி அங்கிருந்து தப்பிக்க ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்து தப்பி ஓடிவிட்டார்.
நாங்கள் அவரது உடமைகளில் அசைவுகளைக் கண்டு சந்தேகமடைந்தோம். சோதனை செய்யத் தொடங்கியதும், காசிம் எங்களை திசைதிருப்பிவிட்டு தப்பி ஓடிவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட 896 ஆமைகளும் உயிருடன் மீட்கப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆமைகள் விரைவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடப்படவுள்ளன" என்று கூறியுள்ளனர்.
கடந்த 15 நாட்களில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இது மூன்றாவது வனவிலங்கு கடத்தல் வழக்கு. ஆமைகள், கடல் ஆமைகள், கிப்பன்கள் மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் போன்ற விலங்குகளை கடத்துவதற்கான முக்கிய மையமாக இந்த விமான நிலையம் மாறிவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இவை நாங்கள் பிடித்த வழக்குகள் மட்டுமே. பல கடத்தல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கக்கூடும்" என்று வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். சுங்கத்துறை, விமான நிலைய அதிகாரிகள் மற்றும் வனத்துறை இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை என்றும், "சிறந்த நெறிமுறைகள் அவசியம். வனவிலங்கு பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
வனத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அன்று கூட்டு சுங்கத்துறை ஆணையரை சந்தித்து, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவது குறித்து விவாதிக்கவுள்ளனர். மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 30 இந்திய நட்சத்திர ஆமைகள் தொடர்பான மற்றொரு வழக்கையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மூன்று முக்கிய நோக்கங்களுக்காக ஆமைகள் மலேசியாவுக்கு கடத்தப்படுகின்றன. முதல் நோக்கம் மூடநம்பிக்கைதான். இந்திய நட்சத்திர ஆமைகளின் முதுகில் உள்ள ஓட்டில் நட்சத்திர வடிவம் இருக்கும். இது ராசியானது என்றும், இதனை வளர்ப்பதன் மூலம் செல்வம் கொழிக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர். எனவே இந்திய நட்சத்திர ஆமைகளுக்கு மலேசியாவில் நல்ல கிராக்கி இருக்கிறது. இதனால்தான் இந்த ஆமைகள் அதிக அளவில் கடத்தப்படுகின்றன.
அதேபோல மருத்துவ நோக்கங்களுக்காவும், கறிக்காகவும் இந்த ஆமைகள் கடத்தப்படுகின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து அதிகள அளவில் இந்த கடத்தல் சம்பவங்கள் நடப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications