சாவுக்கு பாஜக எம்எல்ஏ காரணம்.. கடிதம் எழுதிவைத்து.. கர்நாடக தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழில் அதிபர் காரில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்திற்கு பாஜக எம்.எல்.ஏ உள்பட 6 பேர் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். இந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு இந்த தற்கொலை சம்பவம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனத்தெரிகிறது.
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக ஆட்சியில் ஊழல் முறைகேடு அதிகரித்து இருப்பதாகவும் கமிஷன் அரசாக பாஜக உள்ளதகாவும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் கேட்பதாக கூறி ஒப்பந்த தாரர் சந்தோஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு கடும் நெருக்கடியை ஒப்பந்ததாரர் தற்கொலை ஏற்படுத்தியது.

தொழில் அதிபர் தற்கொலை
இதையடுத்து ஈஸ்வரப்பா அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட துமகூரில் பிரசாத் என்ற ஒப்பந்த தாரர் தற்கொலை செய்து இருந்தார். அரசு ஒப்பந்தங்களுக்கான பில் பாக்கி கொடுக்காததே இவரது தற்கொலைக்கு காரணம் என்று விமர்சனம் எழுந்தது. கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் விதமாக அடுத்தடுத்து இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூருவில் நேற்று ஒரு பிரதீப் என்ற தொழில் அதிபர் காருக்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தனது தற்கொலை கடிதத்தில் பாஜக எம்.எல்.ஏ உள்பட 5 பேர்தான் காரணம் என்று எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய முழு விவரம் வருமாறு:

காருக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கனகபுரா சாலையில் நேற்று ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. காருக்குள் ஒருவர் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தார். திடீரென அந்த காருக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் பதற்றம் அடைந்த அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது ஓட்டுநர் இருக்கையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடந்தார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தற்கொலை கடிதத்தில் பாஜக எம்எல்ஏவின் பெயர்
விரைந்து வந்த போலீசார், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசர் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் பெயர் பிரதீப் (வயது 40) என்பது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்ட காரில் ஒரு கடிதமும் சிக்கியது. அந்தக் கடிதத்தில் பெங்களூருவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பவலி பெயர் உள்பட 6 பேரின் பெயர் எழுதப்பட்டு இருந்தது.

பணத்தை திருப்பி கொடுக்காததால்..
இந்த தற்கொலை சம்பவம் குறித்து கர்நாடக போலீஸ் தரப்பில் கூறியதாவது:- கே.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக சுமார் ரூ.2½ கோடியை 5 பேரிடம் கொடுத்தாராம். ஆனால், இதில் பிரச்சினை எழுந்து இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்த்து வைத்து சமரசம் செய்வதாக பாஜக எம்.எல்.ஏ லிம்பவலி பிரதீப்பை அணுகினாராம். இதற்காக பணமும் கேட்டுள்ளார். இதையடுத்து ஒப்பந்தம் ஒரு மாதத்திற்கு முன்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், கூறியபடி பணத்தை திருப்பி கொடுக்காமல் பிரதீப்பை அனைவரும் ஏமாற்றியிருக்கின்றனர். இதனால், மன உளைச்சல் அடைந்த பிரதீப் தற்கொலை செய்து கொண்டதாக தனது தற்கொலை கடிதத்தில் எழுதி வைத்து உள்ளார்" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications