“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன்
டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையுயர்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த விலை உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்திருக்கும் விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான விநியோகத் தடங்கல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், இந்திய அரசு எடுத்த முன்கூட்டிய நடவடிக்கைகள் காரணமாகப் பொதுமக்கள் பெரும் சுமையிலிருந்து எவ்வாறு பாதுகாக்கப்பட்டனர் என்று அவர் கூறியிருக்கிறார்.

அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், "தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒருவேளை மத்திய அரசு கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால், தற்போதைய விலையை விட நீங்கள் லிட்டருக்கு மேலும் 10 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருந்திருக்கும். ஆனால், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு அந்த வரியைக் குறைத்து, சுமையைத் தன் தோளில் சுமந்து கொண்டது" என்று கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி 28 முதல் போர் மற்றும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டது. இந்த சர்வதேச நெருக்கடி தொடங்கியதில் இருந்து சுமார் 76 நாட்களாக இந்தியப் பொதுமக்களுக்கு எவ்வித விலை ஏற்றமும் தராமல், அதன் நிதிச் சுமையை மத்திய அரசு முழுமையாகத் தாங்கிக் கொண்டது என்று அவர் கூறியிருக்கிறார்.
இதற்காக பெட்ரோல் மீதான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாயாகவும், டீசல் மீதான வரியை முற்றிலும் (பூஜ்ஜியமாக) நீக்கியும் அரசு அண்மையில் மறுசீரமைப்பு செய்தது.
பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கலால் வரிகளைக் குறைத்ததன் விளைவாக, அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று நிர்மலா சீதாராமன் கணக்கிட்டுள்ளார். இருப்பினும், உள்நாட்டுப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்துப் பேசிய அவர், இந்த விலை உயர்வு மத்திய அரசால் செய்யப்படுவது அல்ல என்றார்.
கலால் வரியை அரசு குறைத்துவிட்ட போதிலும், கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து விற்பனை செய்யும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தங்களது நஷ்டத்தை ஈடுசெய்யவே தற்போது விலையை உயர்த்தி வருகின்றன என்று விளக்கமளித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரம் குறித்து எதிர்க்கட்சிகளும், சில விமர்சகர்களும் தேவையில்லாத அவநம்பிக்கையையும் அச்சத்தையும் மக்கள் மத்தியில் விதைப்பதாக அவர் சாடியுள்ளார். "இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு தேவையற்ற பயத்தை உருவாக்கக் கூடாது. தற்போதைய சவால்கள் அனைத்தும் வெளிப்புறக் காரணிகளால் (வெளிநாடுகளில் நடக்கும் போரினால்) உருவானவை. இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் இன்னும் மீள்தன்மையுடனும் நேர்மறையாகவும் தான் உள்ளது" என்று அவர் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications