34 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் ஹரி நாடார்.. ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள ஹரி நாடாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 34 மாதங்களாக சிறையில் உள்ள ஹரி நாடார் ஜாமீனில் விடுதலையாகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைக்குளத்தைச் சேர்ந்த ஹரி நாடார் சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கழுத்து, கை, விரல்கள் என உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு உலாவுவது இவரது வாடிக்கை. வித்தியாசமான இந்த கெட்டப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சியில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஹரி நாடார், தேர்தல் அரசியலிலும் களம் கண்டார். 2019-ல் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது பனங்காட்டுப்படை கட்சி சார்பாக போட்டியிட்டு மூன்றாமிடம் பிடித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் போட்டியிட்டார்.
சுயேட்சை வேட்பாளராக ஹரி நாடார் போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவராக ஹரி நாடார் இருந்தார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வந்த சில நாட்களிலேயே, பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஒரு குற்ற வழக்கில் ஹரி நாடாரை கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஹரி நாடார் மீது அவரது மனைவி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தன்னை மிரட்டுவதாக குற்றம்சாட்டி இருந்தார். இதிலும் ஹரி நாடார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த ஜமாலுதீன் என்ற தொழிலதிபர் ஹரி நாடார் மீது திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் மோசடி புகார் அளித்தார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் விசாரணை கைதியாக சிறையில் இருந்து வந்த ஹரி நாடார் இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார். மேலும் நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கிலும் ஹரி நாடாருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.
அடுத்தடுத்து ஹரி நாடார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் அவர் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்து வந்தார். மற்ற வழக்குகளில் ஹரி நாடாருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், பண மோசடி வழக்கில், ஹரி நாடாருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருந்ததால், அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலேயே கடந்த 34 மாதங்களாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி ஹரி நாடார் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றம், ஹரி நாடாருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது. 34 மாதங்களாக சிறையில் உள்ள ஹரி நாடார் ஜாமீனில் விடுதலையாக உள்ளார்.












Click it and Unblock the Notifications