பெங்களூர் சிக்னல்களில் அதிநவீன ஜப்பான் தொழில்நுட்பம்.. இனி நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை! செம!
பெங்களூர்: இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் ஒன்றான பெங்களூரில் உள்ள முக்கிய சாலை சிக்னல்கள் விரைவில் ஜப்பான் தொழில்நுட்பத்தில் இயங்க உள்ளன. இதன் மூலம், வாகன நெரிசலுக்கு ஏற்ப சிக்னல் நேரங்கள் தானாகவே மாறிக்கொள்ளும்.
இந்தியாவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் ஒன்று பெங்களூர். அதிலும் பீக் ஹவர் எனப்படும், காலை மற்றும் மாலை நேரங்களில், அலுவலகங்களுக்குச் செல்வோர் மணிக்கணக்கில் டிராபிக்கில் சிக்கிக்கொள்வது பெங்களூரில் வாடிக்கை. டெக்னாலஜி ஹப்பாக மாறியிருக்கும் பெங்களூரில் அதிகரித்த வாகனங்கள் காரணமாக, போக்குவரத்து நெரிசல் என்பது கட்டுப்படுத்த இயலாததாக உள்ளது.

பெங்களூர் டிராஃபிக்: 1 கோடிக்கும் அதிகமான வாகனங்களைக் கொண்ட பெங்களூரில் கிட்டத்தட்ட 40,000 போக்குவரத்து சந்திப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் 400 சாலை சந்திப்புகள் சிக்னல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் 600 சந்திப்புகளில் சிக்னல்கள் இன்றி, போக்குவரத்து காவலர்களால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. டச்சு இருப்பிட தொழில்நுட்ப நிபுணரான டாம் டாம் சமீபத்தில் வெளியிட்ட போக்குவரத்துக் குறியீட்டின்படி, பெங்களூர் 2023 ஆம் ஆண்டில் உலகளவில் நெரிசல் மிகுந்த நகரங்களில் ஆறாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெங்களூர் நகரின் முக்கிய சாலை சந்திப்பு சிக்னல்கள் ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் இயங்க உள்ளன. அடாப்டிவ் சிக்னல் கன்ட்ரோல் டெக்னாலஜி மூலமாக, நெரிசலைக் குறைத்து, சிக்னல்களில் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்த, அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, MODERATO அப்ளிகேஷன் மூலமாக, ஏரியா டிராஃபிக் கண்ட்ரோல் சிஸ்டத்தின் (ATCS) அடிப்படையில் செயல்படுகிறது.
அதென்ன ஏ.டி.எஸ்.சி.எஸ் சிஸ்டம்?: அடாப்டிவ் ட்ராஃபிக் சிக்னல் கண்ட்ரோல் சிஸ்டத்தில் (ATSCS) வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கான சிக்னல்கள், வாகன இயக்கத்தை அளவிடுவதற்கான ஆட்டோமேட்டிக் ட்ராஃபிக் கவுன்டர் மற்றும் ட்ராஃபிக்கை கண்காணிப்பதற்காக முக்கியமான சந்திப்புகளில் வரிசை நீள அளவீட்டு சிஸ்டம் ஆகியவை அடங்கும்.
அனைத்து சாலை சந்திப்புகளிலும் சிக்னல் நேரத்தை ரியல் டைமில் கண்காணிக்க ஒரு சென்ட்ரல் கண்ட்ரோல் சாஃப்வேர் (MODERATO) பயன்படுத்தப்படும். சிக்னலில், எந்தப் பக்கம் உள்ள சாலையில் அதிக வாகனங்கள் வரிசையில் நிற்கின்றனவோ, அப்பகுதியில் வாகன நெரிசலை கிளீயர் செய்ய, அப்பகுதிக்கு கூடுதல் நேரம் கிரீன் சிக்னல் ஒளிரும். இதன் மூலம், எல்லா பகுதிக்கும் சமமான கால அளவிற்கு ரெட் சிக்னல் விழுவது தவிர்க்கப்படும்.
28 சிக்னல்களில்: பெங்களூரில் உள்ள எம்.ஜி.சாலை, ஓசூர் சாலை, பழைய மெட்ராஸ் சாலை ஆகிய 28 முக்கிய சந்திப்புகளில் உள்ள இந்த போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல் டைமர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சந்திப்பிலும் உள்ள வாகனங்களின் அடர்த்தியின் அடிப்படையில் சிக்னல்கள் தானாக மாறுவதற்கு புதிய அமைப்பு உதவும்.
கென்சிங்டன் சாலை மற்றும் மர்பி சாலை சந்திப்பில் உள்ள சிக்னல் செயல்முறைகளை சரிபார்க்க தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு, இந்த புதிய தொழில்நுட்பம் இயக்கப்பட்டது. சிக்னல்களின் உண்மையான சோதனை பிப்ரவரி 2024 கடைசி வாரத்தில் இருந்து தொடங்கும் என இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் நகர்ப்புற நில போக்குவரத்து இயக்குனரகம் (DULT) கமிஷனர் தீபா சோழன் தெரிவித்துள்ளார்.
விரிவான சோதனைக்குப் பிறகு பெங்களூரில் புதிய தொழில்நுட்பத்துடன் தயாராகியுள்ள 28 சிக்னல்களும் மார்ச் 2024க்குள் செயல்படத் தொடங்கும். ரூ. 72-கோடி திட்டத்திற்கு ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) நிதியுதவி அளித்துள்ளது மற்றும் ஜப்பானிய நிறுவனமான Nagoya Electric Works Company Limited இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் முதல்: "சிக்னல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சென்சார்கள் நிறுவுவதற்கான சிவில் பணிகள் முடிந்துவிட்டன. சிக்னல்களுக்கான மின் இணைப்பு நிறைவடைந்தது, மேலும் சென்சார்களுக்கான மின் இணைப்பு பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் மேற்கொள்ளப்படும், அதைத்தொடர்ந்து, சோதனை நடத்தப்பட்டு, மார்ச்சில் சிக்னல்கள் அனைத்தும் செயல்படத் துவங்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் முதன்முதலில் 2014 இல் அறிவிக்கப்பட்டது, ஆனால் ஜூலை 2021ல் தான் பணிகள் வேகம் பெற்றன. எனினும், கொரோனா பரவல் காரணமாக இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. பணிகள் துவங்கியதும், மெட்ரோ திட்ட கட்டுமானம், சாலை விரிவாக்கம் போன்றவற்றால் வடிவமைப்பு மாற்றப்பட்டு இந்த திட்டம் தற்போதைய வடிவத்திற்கு வந்துள்ளது.
சோதனை முடிந்ததும், சிக்னல்கள் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதன் பிறகு இந்த ஆட்டோமேட்டிக் சிஸ்டம் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார். விஐபி வருகை மற்றும் அவசரகாலங்களில் வாகனங்களின் இயக்கத்தை அனுமதிக்க மேனுவல் செயல்முறை வசதியும் இந்த சிக்னல்களில் உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
