பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம
பெங்களூர்: பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தான் புதிய வழித்தடமான பெங்களூர் பன்னரக்கட்டா ரோட்டில் கலேனா அக்ரஹாரா முதல் தாவரகெரோ வரை 7.5 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை ஆகஸ்ட் 15ம் தேதி இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பொதுமக்கள் விரைவாக பயணிக்க மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. பெங்களூர் நகரில் மொத்தம் 96.10 கிலோமீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.

அந்த வகையில் பெங்களூருவில் மாதவரா முதல் சில்க் போர்ட் வரை பச்சை வழித்தடத்திலும், ஒயிட்பீல்டில் இருந்து சல்லகட்டா வரை ப்ளூ வழித்தடத்திலும், ஆர்.வி.ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரை மஞ்சள் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.
இதன் அடுத்தக்கட்டமாக தொடர்ந்து மெட்ரோ சேவையை விரிவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் பெங்களூரில் பன்னரக்கட்டா ரோட்டில் 'பிங்க்' வழித்தடத்தில் மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 21.25 கிமீ தொலைவிற்கு இந்த பணிகள் நடந்து வருகிறது. அதன்படி பெங்களூர் கலேனா அக்ரஹாராவில் (இதற்கு முன்பு கொட்டிக்கெரே) இருந்து நாகவரா ஸ்டேஷன் வரை இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பயணிக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது கலேனா அக்ரஹாராவில் இருந்து தாவரகெரே வரையிலான 7.5 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் பாதை பணி முடிவதுமாக முடிவடைந்துள்ளது. ஆர்டிஎஸ்ஓ (Research Designs and Standards Organisation or RDSO) சார்பில் ஆய்வு பணிகள் ஜூன் 4ம் தேதி தொடங்கியது. தற்போது வேக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து வகையான சோதனைகளும் ஜூன் மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது.
இந்த சோதனைகளில் பாசிட்டிவான ரிசல்ட் வரும் பட்சத்தில் கலினா அக்ரஹாரா - தாவரகெரே இடையே ஆகஸ்ட் 15ம் தேதி மெட்ரோ ரயில் இயக்க வாய்ப்புள்ளது. இந்த 7.5 கிலோமீட்டர் தொலைவில் மொத்தம் 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதில் ஜெயதேவா மருத்துவமனையில் இன்டர்சேஞ்ச் வசதி உள்ளது. இங்கிருந்து பிற வழித்தடங்களில் பயணிக்கும் மெட்ரோ ரயில்களில் பயணிக்க முடியும்.
அதன்படி 'பர்பிள் லைன்' (சல்லக்கட்டா - ஒயிட்பீல்ட் (காடுகோடி)) மற்றும் 'மஞ்சள் லைன்' (ஆர்வி ரோடு -பொம்மசந்திரா லைன்) ரயில் பாதையில் இணைக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த 'பிங்க்' வழித்தடத்தில் டெய்ரி சர்க்கிள் முதல் நாகவரா வரையிலான 13.75 கிலோமீட்டர் சுரங்கப்பாதையில் 2026 டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications