"நாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை".. புகாரளித்த பெண்.. போலீஸ் செய்த வேலையை பாருங்க
பெங்களூர்: இரவில் நாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை என கண்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு பெண் ஒருவர் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் ஸ்பாட்டுக்கு சென்று தெருநாய்களை விரட்டிய வினோத சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பொதுமக்களின் அவசர உதவிக்காக மாவட்ட வாரியாகவும், முக்கிய நகரங்களிலும் போலீசார் கட்டுப்பாட்டு அறைகளை திறந்து வைத்துள்ளனர்.இந்த கட்டுப்பாட்டு அறை 24X 7 என்ற அடிப்படையில் செயல்படும்.

பொதுமக்கள் ஏதேனும் பிரச்சனைகளில் சிக்கி கொண்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் போதும். அடுத்த சில நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விடுவார்கள்.
தெருநாய்களால் கலைந்த தூக்கம்
இந்நிலையில் தான் பெங்களூரில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. அதாவது பெங்களூர் சம்பிகேஹள்ளியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் தனியார் அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார். இவர் இரவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டு அருகே தெருநாய்கள் கூட்டமாக நின்று குரைத்தன. இதனால் அந்த பெண்ணின் தூக்கம் கலைந்தது. மீண்டும் மீண்டும் அந்த பெண் தூங்க முயன்றார். ஆனால் அவரால் தூங்கமுடியவில்லை.
கட்டுப்பாட்டு அறைக்கு போன்
மேலும் இரவு நேரம் என்பதால் அந்த பெண்ணால் வெளியே சென்று தெருநாய்களை விரட்டவும் முடியவில்லை. அதோடு தெருநாய்களை விரட்டும்போது கடித்தால் என்ன செய்வது? என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இதனால் அந்த பெண் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். 112 என்ற அவசர உதவி எண்ணில் அவர் பேசினார்.
உதவி செய்த போலீஸ்
அப்போது ''தெருநாய்கள் நீண்டநேரமாக குரைக்கிறது. என்னால் தூங்க முடியவில்லை. இரவு நேரம் என்பதால் தெருநாய்களை விரட்டவும் பயமாய் இருக்கிறது'' என்று தனது பிரச்சனையை கூறியுள்ளார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர் உதவி செய்வதாக கூறினார்.. அதோடு சம்பந்தப்பட்ட சம்பிகேஹள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்து அந்த பெண்ணின் முகவரியை வழங்கினார்.
தெருநாய்களை விரட்டிய போலீசார்
இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் ஹொய்சாலா வாகனத்தில் அந்த பெண்ணின் வீட்டு அருகே சென்றனர். அங்கு குரைத்து கொண்டிருந்த தெருநாய்களை அவர்கள் விரட்டினர். இதையடுத்து போலீசுக்கு அந்த பெண் நன்றி தெரிவித்தார். அதன்பிறகு அந்த பெண் நிம்மதியாக தூங்கி உள்ளார்.
போலீசுக்கு பாராட்டு
இதுதொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. போலீசாரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்போ பெங்களூரில் தெருநாய்களை கட்டுப்படுத்த பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது தெருநாய்களை போலீசார் வந்து விரட்ட வேண்டிய நிலை வந்துள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications