பெங்களூரை புரட்டிப்போட்ட கனமழை.. எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் கரைபுரண்ட வெள்ளம்.. வீடியோ
பெங்களூர்: பெங்களூரில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை (Bengaluru Rain) பெய்தது. இதனால் நகரில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் மழைநீர் வெள்ளமாக தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் இன்றும் பெங்களூர் நகரில் ‛மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் நேற்று இரவு திடீரென்று கனமழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவில் பெய்ய தொடங்கிய இந்த மழை அதிகாலை வரை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்தது.

குறிப்பாக இன்று காலை 5.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெங்களூரில் 65.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. குறிப்பாக பெங்களூர் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக பெங்களூர் புறநகர் தொட்டபள்ளாப்புராவில் 60 மில்லி மீட்டர் மழை, சந்துராயனஹள்ளியில் 46 மில்லி மீட்டர், எசரகட்டாவில் 43 மில்லி மீட்டர் மழை பெய்தது.
எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம்
இதனால் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்குள் நுழையும் பல இடங்களில் மழை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக தமிழ்நாடு - பெங்களூரை இணைக்கும் வகையில் அமைந்து இருக்கும் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் வெள்ளம் சூழ்ந்தது.
கனமழையின் காரணமாக மேம்பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். தேங்கிய தண்ணீரில் பயணித்த சில வாகனங்கள் பழுதாகி நின்றன.
பரவும் வீடியோ
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. மேலும் இந்த கனமழையின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
#bengalururains
— Vivek Ganesan (@Vivek_Ganesan) September 19, 2025
Electronic City flyover waterlogged pic.twitter.com/vSbCgz0xMQ
கெட்டலஹள்ளியில் இருந்து வடராபாளையா செல்லும் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் ராமமூர்த்தி நகரில் இருந்து எம்எம்டி ஜங்ஷன் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெங்களூருவுக்கு மஞ்சள் அலர்ட்
இதுதவிர இன்றும் பெங்களூரில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெங்களூரில் மழைக்கான ‛மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் வானிலை நிலவும் போது மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதனால் பெங்களூரில் இன்றும் பல இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.
மின்தடை ஏற்பட வாய்ப்பு
இதுதவிர சூறைக்காற்று வீசும். இதனால் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள், மின்கம்பங்கள் மீது விழலாம். இதனாில் மின்சப்ளை பாதிக்கப்படலாம். இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக பெங்களூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் நேற்று கனமழை பெய்தது. சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கனகமகாளபள்ளியில் 30 மில்லி மீட்டர், திருமணியில் 114 மில்லி மீட்டர், பீசனஹள்ளியில் 114 மில்லி மீட்டர், செல்லூரில் 101 மில்லி மீட்டர் மழை பெய்ததது. பீதர் மாவட்டம் பந்தர்கும்டாவில் 112 மில்லி மீட்டர், கதக்கில் 51.9 மில்லி மீட்டர், மங்களூரில் 20.7 மில்லி மீட்டர் மழைபெய்தது.












Click it and Unblock the Notifications