கோலி மீது வழக்குப்பதிவு செய்யுங்க.. பெங்களூர் போலீசுக்கு பறந்த பரபரப்பு புகார்.. பின்னணி
பெங்களூர்: பெங்களூரில் நடந்த ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 47 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் விராட் கோலி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கப்பன் பார்க் போலீசில் பரபரப்பான புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் முக்கிய விஷயத்தை கூறியுள்ளனர்.
ஆர்சிபி.. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பை என்பது பெரும் கனவாக இருந்தது. 17 சீசன்கள் விளையாடியும் அந்த அணியால் ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. இந்த ஐபிஎல் கோப்பை ஏக்கம் இப்போது தணிந்துவிட்டது.

கடந்த 3ம் தேதி இரவில் நடந்த ஐபிஎல் 18 வது சீசன் பைனலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள், வீரர்கள் இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாடினர்.
கடந்த 4ம் தேதி கோப்பையுடன் பெங்களூர் வந்த ஆர்சிபி அணி வீரர்களுக்கு பூங்கொத்து கொடுத்து துணை முதல்வர் டிகே சிவக்குமார் வரவேற்றார். அதன்பிறகு பெங்களூர் விதானசவுதா மற்றும் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் கூடினர். விதான சவுதா முதல் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் வரை ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 14 வயது சிறுமி, தமிழக பெண் உள்பட 11 பேர் இறந்தனர். 47 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் சிவமொக்காவை சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேஷ் என்பவர் பெங்களூர் கப்பன்பார்க் போலீசில் இன்று புகார் ஒன்றை அளித்தார். அதில் ஆர்சிபி அணியின் சீனியர் வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.இந்த புகாரை கப்பன் பார்க் போலீசார் பெற்று கொண்டனர். அதோடு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த புகாரையும் சேர்த்து விசாரிப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனால் விராட் கோலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக கூட்ட நெரிசல் தொடர்பாக ஆர்சிபி அணி, நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மற்றும் கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் மீது கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் கீழ் தான் சமூக ஆர்வலர் வெங்கடேஷின் புகாரையும் விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தது தொடர்பாக ஐபிஎல் 2025 சாம்பியனுக்கான மார்க்கெட்டிங் பிரிவின் தலைவர் நிகில் சோசலியை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கூட்ட நெரிசல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா தனது அரசியல் செயலாளர் கோவிந்தராஜை பணி நீக்கம் செய்துள்ளார். அதேபோல் பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தா உள்பட சில முக்கிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார். உளவுத்துறை பிரிவின் தலைவராக செயல்பட்ட ஹேமந்த் நிம்பால்கரை பணி இடமாற்றம் செய்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications