திருடிய வீட்டிலேயே தற்கொலை! நகை, பணத்தை மூட்டை கட்டி தூக்கில் தொங்கிய திருடன் - பெங்களூரில் மர்மம்
பெங்களூர்: பெங்களூரில் கொள்ளையன் ஒருவன் தான் திருடச் சென்ற வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம், நகைகள் என அனைத்தையும் மூட்டை கட்டி வைத்த பின்னர் அவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் மர்மமாக உள்ளது.
உண்மையிலேயே அவன் தற்கொலை செய்து கொண்டானா அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடை தெரியா மர்மங்கள்
உலகில் விடை கண்டுபிடிக்க முடியாத பல மர்மமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் இதுபோன்ற மர்மங்கள் அதிக அளவில் இருக்கும். பல ஆண்டுகள் கடந்தும் கூட துப்பு துலங்காத கொலை சம்பவங்கள் உலகில் நடந்திருக்கின்றன. உதாரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் கதவு, ஜன்னல்கள் அனைத்தும் உள்புறமாக தாழிட்ட ஒரு வீட்டில், பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் இன்னும் துப்புத் துலங்காமல் போலீசார் திணறி வருகின்றனர். அதுபோல பல சம்பவங்களை நாம் பட்டியலிடலாம். அந்த வகையில், பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

திறக்காத கதவு
பெங்களூரு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் ஸ்ரீதர் சமந்தாராய் (42). மென் பொறியாளராக பணிபுரிந்து வரும் இவர், தனது மனைவியுடன் கடந்த மாதம் 20-ம் தேதி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றார். சுமார் ஒரு மாதக்காலம் சுற்றுலா சென்றுவிட்டு கடந்த 20-ம் தேதி கணவனும், மனைவியும் வீடு திரும்பி உள்ளனர். அப்போது சாவியை எடுத்து வீட்டை திறந்து பார்த்ததில் கதவு திறக்காமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, பக்கத்தில் உள்ள சாவி செய்யும் கடையில் மாற்று சாவி ஒன்றை செய்து அவர்கள் கதவை திறந்துள்ளனர்.

தூக்கில் தொங்கிய கொள்ளையன்
அப்போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளும், பணமும் திருடப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீஸார் அங்கு வந்து ஒவ்வொரு அறையாக சோதனை செய்து கைரேகை தடயங்களை சேகரித்தனர். எதேச்சையாக பூஜை அறையை திறந்து பார்த்த போது அங்கு ஒரு நபர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து போலீஸார் அச்சத்தில் உறைந்தனர்.

பிரபல கொள்ளையன்
பின்னர் அந்த நபரின் உடலை மீட்டு, அவரை புகைப்படம் எடுத்து மற்ற காவல் நிலையங்களுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அப்போது அவன் பிரபல கொள்ளையன் திலீப் பகதூர் (45) என்பதும், அசாமை சேர்ந்த இவன் பெங்களூருவில் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வந்ததும் தெரியவந்தது. பல கொள்ளைச் சம்பவங்களில் இவன் ஈடுபட்டு போலீஸாரால் கைதும் செய்யப்பட்டிருக்கிறான்.

மர்ம தற்கொலை - போலீஸ் விசாரணை
இந்நிலையில், கொள்ளையடிக்க வந்த வீட்டில் திலீப் பகதூர் எதற்கு தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். கொள்ளையடிக்க வந்த திலீப் பகதூர், வீட்டின் கதவை உடைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வந்து, கச்சிதமாக கதவையும் உடைத்திருக்கிறார். பின்னர் பல லட்சம் மதிப்பிலான நகைகளையும், ரூ.3 லட்சம் ரொக்கத்தையும் எடுத்து அதை மூட்டையாகவும் கட்டியுள்ளார். இதையடுத்து, நாள் முழுக்க அந்த வீட்டில் ஏசியை போட்டு தூங்கியும் இருக்கிறார். அனைத்தையும் செய்து முடித்த அந்தக் கொள்ளையன், திடீரென தூக்கில் தற்கொலை செய்து கொண்டது எதற்காக? வீட்டில் பெரிய பெரிய அறைகள் இருக்கும் போது, மிகச்சிறிய பூஜை அறையில் அவர் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? என்பன போன்ற பல கேள்விகள் போலீஸாரை துளைத்தெடுத்து வருகின்றன. இந்த மர்ம சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications