நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினால் ‛அபேஸ்'.. பெங்களூரில் மீண்டும் ‛டோவிங்' அமல்.. மக்களே கவனம்
பெங்களூர்: இந்தியாவின் சிலிக்கான் சிட்டி, நம்ம பெங்களூர்... பரபரப்பான வளர்ச்சி, மின்னல் வேக நகரமயமாதல் என எல்லா திசையிலும் முன்னேற்றம். ஆனால், கூடவே ஒரு மாபெரும் தலைவலியும் வளர்ந்து வருகிறது. அதுதான், தாங்க முடியாத போக்குவரத்து நெரிசல்! இந்த இம்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, பெங்களூரு போக்குவரத்து காவல்துறை இப்போது களமிறங்கியுள்ளது. ஏற்கனவே அபராதங்களால் அல்லாடி வரும் வாகன ஓட்டிகளுக்கு, இப்போது புதுவிதமான, இன்னும் கடுமையான சவாலொன்றை முன்வைத்துள்ளது. ஆம், இனி தவறான வாகன நிறுத்தம் செய்தால், உங்கள் வாகனம் அபேஸ்!
பெங்களூர் டிராபிக்
பெங்களூர் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நகரத்தின் மக்கள் தொகைக்கு இணையாக, வாகனங்களின் எண்ணிக்கையும் மலைபோல உயர்ந்து, சாலைகள் அனைத்தும் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன.

நவீன கேமராக்கள், தொழில்நுட்பங்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது வாகன நிறுத்தம் (Parking) விவகாரத்திலும் போலீசார் தங்கள் மாஸ்டர் பிளானை அரங்கேற்றத் தயாராகிவிட்டனர்.
டோவிங் (Towing) அஸ்திரம்
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவர, ஒரு காலத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி நிறுத்தப்பட்ட "டோவிங்" முறை மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது! இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள போக்குவரத்து காவல்துறை, பெங்களூருவில் 1.4 கோடி மக்கள் வசிப்பதாகவும், அதற்கு நிகராக 1.2 கோடி வாகனங்கள் சாலைகளில் ஓடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
"பெங்களூரு சாலைகள் இப்போது நிரம்பி வழிகின்றன. இந்த சூழலை மாற்ற, நாங்கள் கடுமையான முறையற்ற வாகன நிறுத்த அபராதத்தை அமல்படுத்துகிறோம். அத்துடன், நகரம் முழுவதும் டோவிங் முறையை மீண்டும் தொடங்குகிறோம். இந்த நடவடிக்கை உங்கள் பயணத்தை இன்னும் சீரமைக்க உதவும். தயவுசெய்து உங்கள் வாகனத்தை பொறுப்புடன், சரியான இடங்களில் நிறுத்துங்கள். இல்லையெனில், அபராதமோ அல்லது உங்கள் வாகனம் டோவிங் செய்யப்படுவதோ நிச்சயம்!" என காவல்துறை நேரடியாகவும், உறுதியாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு கட்டுப்பாட்டில் டோவிங்
கடந்த காலத்தில், பெங்களூர் முழுவதும் டோவிங் முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வாகனங்களை டோவிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இதை ஒரு 'வசூல் வேட்டை' போல நடத்தியதாகவும், வாகன உரிமையாளர்களுடன் தேவையில்லாத தகராறுகள் ஏற்பட்டதாகவும், வாகனங்களை இழுத்துச் செல்லும்போது சேதப்படுத்தியதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக, டோவிங் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஆனால், இப்போது மீண்டும் வாகன டோவிங் முறை அமல்படுத்தப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். "வரும் ஆகஸ்ட் மாதம் முதலே டோவிங் முறையை மீண்டும் தொடங்குவோம். ஆனால், இந்த முறை டோவிங் சேவை முழுவதும் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். எந்த ஒரு தனியார் ஒப்பந்ததாரருக்கும் இனி அனுமதி கிடையாது!" என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இது டோவிங் முறையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போலீசாரின் அன்பான அறிவுரை
சமீபகாலமாக, போக்குவரத்து சிக்னல்களிலேயே வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்படும் சிறு சிறு வாக்குவாதங்கள், பெரிய சண்டைகளாக மாறிவிடுவதைப் பார்க்க முடிகிறது. ஒரு சிறிய ஹார்ன் ஒலி அல்லது ஒருவரை ஒருவர் உற்றுப்பார்ப்பதில் இருந்து தொடங்கும் இந்த வாக்குவாதங்கள், சில சமயங்களில் சாலைகளில் பெரும் சண்டைகளாக உருவெடுத்து விடுகின்றன. இது குறித்து எச்சரித்துள்ள காவல்துறை, "ஒரு கணம் அமைதியாக, ஆழமாக மூச்சு விடுங்கள். சாலைகளில் ஏற்படும் கோபம் உங்களை ஆட்கொள்ள அனுமதிக்காதீர்கள்!" என்று அன்புடன் அறிவுறுத்தியுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கைகள் பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு தீர்வாக அமையுமா என்பதையும், வாகன ஓட்டிகள் இந்த புதிய விதிகளை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனி பெங்களூர் சாலைகளில் வாகனம் நிறுத்தும்போது, கூடுதல் கவனம் தேவை!












Click it and Unblock the Notifications