இதெல்லாம் ரோடா? பெங்களூர் சாலை பற்றி சீன விருந்தினர் சொன்ன வார்த்தை! அப்செட் ஆன கிரண் மஜூம்தார்
பெங்களூர்: தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரமாக இருக்கும் பெங்களூர், சாலை தரத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறது. இது குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துக்கொண்டே இருக்கின்றன. தற்போது பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா, பெங்களூர் சாலைகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பெங்களூரில் சாலைகள் மிக மோசமானதாக இருப்பதாகவும், சாலைகளின் ஓரத்தில் குப்பை கழிவுகள் அப்படியே மேலாண்மை செய்யப்படாமல் இருப்பதாகவும், தன் நிறுவனத்திற்கு வந்திருந்த சீன விருந்தினர் இது குறித்து அதிருப்தி தெரிவித்ததாகவும் கிரண் மஜும்தார் ஷா கூறியுள்ளார்.

பெங்களூரை தரம் உயர்த்த வேண்டும்
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, "நமது நகரத்தை சரி செய்து உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கான அரசியல் அவசரத்தை அரசியல் தலைமை ஏன் காட்டவில்லை? என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது. இதற்கு பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்துதல் அடிப்படையில் கவனம் செலுத்துவதை தவிர வேறு எதுவும் தேவையில்லை. இதைச் செய்ய ஒரு பில்லியன் டாலர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட வேண்டும்.
பயோகான் பார்க்குக்கு வந்த வெளிநாட்டு வணிகர் ஒருவர், 'ஏன் சாலைகள் இவ்வளவு மோசமாக உள்ளன, ஏன் இவ்வளவு குப்பைகள் உள்ளன? அரசாங்கம் முதலீட்டை ஆதரிக்க விரும்பவில்லையா? நான் சீனாவிலிருந்து வந்திருக்கிறேன், வணிகத்திற்கான வாய்ப்புக்கள் சாதகமாக இருக்கும்போது இந்தியா ஏன் தனது செயல்களை ஒருங்கிணைக்க முடியவில்லை என்று எனக்குப் புரியவில்லை?' என்று கேட்டார்" என்று கூறியிருக்கிறார்.
எவ்வளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும்?
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் எனில், ரூ.83,000 கோடியாகும். இந்த நிதியை பெங்களூரின் சாலை மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டும். பின்னர் இந்த நிதி முழுக்க முழுக்க இதற்காக மட்டுமே செலவழிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் கிரண் மஜும்தார் ஷா வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிரான வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் தொடங்கி, இதர அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் சீனாவில் தங்கள் பொருளை உற்பத்தியை செய்வதை குறைத்துக்கொண்டு வருகின்றன. அதேநேரம் சீனாவுக்கு மாற்றாக வேறு நாடுகளை தேடி வருகின்றன. இப்படி தேடும் நிறுவனங்கள், இந்தியாவை சிறந்த மாற்றாக பார்க்கின்றன. இந்தியாவில் உழைப்பு சக்தி அதிகம். ஊதியமும் குறைவு என்பதால், தொழிற்சாலைகளை உருவாக்கி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டிருக்கின்றன.
இந்தியாவுக்கான வாய்ப்பு
ஆனால், உள்நாட்டில் கட்டமைப்புகள் சரியில்லாதது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சரியான சாலை வசதிகள், தடையற்ற போக்குவரத்துக்கான வாய்ப்புகள் இல்லாதது, சுற்றுச்சூழல் மேலாண்மை, கழிவு மேலாண்மை உள்ளிட்டவற்றில் இந்தியா இன்றும் முழுமையாக முன்னேறவில்லை. இப்படி இருப்பதால் முதலீடுகள் வருவதற்கு தயங்குகின்றன. எனவே இதை முதலில் சரி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இப்போது பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா இந்த கருத்தை எதிரொலித்திருக்கிறார்.
பெங்களூரின் வளர்ச்சி
பெங்களூரின் ஜிடிபி சுமார் ரூ.30 லட்சம் கோடியாகும். கர்நாடக மாநிலத்தின் மொத்த ஜிடிபியில் பெங்களூர் மட்டும் 43.65% அளவுக்கு பங்களிப்பு செய்கிறது. இது 2023ம் ஆண்டு தரவுகள். 2025ம் ஆண்டு பெங்களூரின் ஜிடிபி அதிகரித்திருக்கும். இது அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கலாம். எனவே அதற்கேற்றார் போல உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications