“சீஃப் கெஸ்ட்” அலிஷா அப்துல்லா.. கால்பந்து வீராங்கனை பிரியா நினைவிருக்கா? குடும்பத்துக்கே பாஜக வலை
சென்னை: கால் அகற்றப்பட்டு உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றனர். தங்கள் மகள் பிரியா மரணம் தொடர்பாக வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் - உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (17). இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி. உடற்கல்வியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார்.
கால்பந்து வீராங்கனையான இவருக்குப் பயிற்சியின் போது வலது கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டு உள்ளது. இதற்காக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்தவமனையில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

காலில் வீக்கம்
பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு அவரது காலில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டதன் காரணமாக அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியாவுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் அவரது வலது கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்து உள்ளார்.

பிரியா பெயரில் கால்பந்து நிகழ்ச்சி
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம், பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை மற்றும் வீடு வழங்கப்பட்டது. 2 மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அலிஷா அப்துல்லா
இந்த நிலையில் மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா நினைவாக மகளிர் கால்பந்து போட்டி சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. இதனை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா துவக்கி வைத்தார். இதில் பிரியாவின் தாய் உஷா மற்றும் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இதில் 12 அணிகள் பங்கேற்கின்றனர். முதல் பரிசு 10 ஆயிரம், இரண்டாவது பரிசு 5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தாய் பேட்டி
இதில் பங்கேற்ற பிரியாவின் தாய் உஷா, சகோதரர் லாரன்ஸ் ஆகியோர் பேசுகையில், பிரியா கால்பந்து விளையாடும் போது நேரடியாக சென்றது இல்லை. ஆனால் இன்று வந்திருக்கிறேன். அவர் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அவரது பெயரில் விளையாட்டு போட்டி நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
எங்களது குடும்பத்தின் ஒரே கோரிக்கை பிரியா மரணத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை தேவை. தொடர்ந்து காவல் நிலையத்தில் உள்ள அந்த வழக்கை கண்காணித்து வருகிறோம். எங்களுக்கு விரைவில் பிரியா மரணத்திற்கு காரணாமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை தேவை." என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications