தமிழர்களுக்கு எதிராக கன்னடர்களை தூண்டாதீங்க.. அமைச்சர் தமிழ் பேசுவது தப்பா? தமிழர் இயக்கம் கண்டனம்
பெங்களூர்: பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழர்கள் மத்தியில் பாஜக அமைச்சர் முனிரத்னா தமிழில் பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான் பெங்களூரில் பாஜக அமைச்சர் முனிரத்னா தமிழில் பேசியது தவறு எனக்கூறி கன்னடர்கள் மற்றும் தமிழர்கள் இடையே இனப்பிரச்சனையை இழுத்து விட வேண்டாம் என காங்கிரஸ் கட்சிக்கு கருநாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தான் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், தோட்டக்கலைத்துறை அமைச்சருமான முனிரத்னா பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
வரும் சட்டசபை தேர்தலில் அவர் மீண்டும் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளார். இந்த தொகுதியில் தமிழர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இந்நிலையில் தான் ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஜாலஹள்ளி வார்டில் காதா நகரில் நடந்த நிகழ்ச்சியில் முனிரத்னா தமிழில் பேசினார்.

தமிழில் பேசிய பாஜக அமைச்சர்
இதுதொடர்பான வீடியோ வெளியானது. அதில், ‛‛எங்கடா போனீங்க 4 வருஷமா என கேளுங்கள்.. யாராவது உள்ளே வந்தால் துரத்தி அடிக்க வேண்டும். மிச்சத்தை நான் பார்த்து கொள்கிறேன். எப்படி அடிக்க வேண்டும் தெரியுமா? திரும்பி பார்க்காமல் ஓடும்படி அடிக்க வேண்டும். நாளை நமது தான். நாளைக்கு ஓட்டு போடுறீங்க தானே அதுதான் நாளை நமது என தமிழில் பேசுவது மட்டுமே உள்ளது. அதாவது 5 ஆண்டுகளாக தொகுதி மக்கள் வராத பிற கட்சியினரை விரட்டி அடிக்க முனிரத்னா எம்எல்ஏ கூறியதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் வேட்பாளர் புகார்
இந்த வீடியோவை ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குசுமா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‛‛கலவரத்தை தூண்டும் வகையில் முனிரத்னா பேசியுள்ளார். கர்நாடகாவில் இருந்து கொண்டு தமிழில் பேசி கன்னடா மற்றும் தமிழ் மொழி பேசும் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அடித்து விரட்டுங்கள் என கூறியுள்ளார். இதில் யாராவது கொல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?'' என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் முனிரத்னாவுக்கு எதிராக பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம் புகார் அளித்தார்.

காங்கிரஸ் எம்பி எதிர்ப்பு
இதேபோல் பெங்களூர் புறநகர் எம்பியும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டிகே சிவக்குமாரின் தம்பியுமான டிகே சுரேசும் முனிரத்னாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். முனிரத்னா தமிழர், கன்னடர்கள் இடையே பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் ஒக்கலிக பெண் வேட்பாளர் குசுமாவுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

தமிழர் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்
இந்நிலையில் தான் ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குசுமா இனப்பிரச்சனையை இழுத்து விடுவதாக கர்நாடாக தமிழர் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கோபி ஏகாம்பரம் ஆதங்கத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சில நிமிட தமிழ் பேச்சு
நேற்று பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக அமைச்சர் முனிரத்னா கன்னடத்திலும் பிறகு இறுதியில் சில நிமிடங்கள் தமிழிலும் பேசினார். அவர் பாஜகவை சார்ந்தவர். கட்டாய மதம் மாற்ற வருபவர்களையும், மக்கள் பணி செய்யாதவர்களும் வந்தால் விரட்டி அடியுங்கள் என்று அவர்களுடைய இந்துத்துவா கொள்கைப்படி பேசினார். அதேபோல காங்கிரஸ் கட்சியினர் கூட இந்துக்களை இழிவு செய்து பேசிவருகின்றனர். இது அவரவர்களுடைய கொள்கைகள். இதில் தமிழர்கள் நாங்கள் தலையிடவில்லை.

கீழ்த்தரமான அரசியல்
ஆனால் காங்கிரஸ் கட்சியின் ராஜராஜேஸ்வரி நகர் வேட்பாளர் குசுமா அரசியல் மேடை பேச்சை திரித்து கன்னடர் தமிழர் பிரச்சனை ஏற்படும் என்று ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கிறார். தமிழில் பேசிவிட்டார் என்று கன்னட அமைப்புகளை தூண்டிவிடுகிறார். பெங்களூரு போலிஸ் கமிஷனரிடமும் புகார் கொடுத்துள்ளார். நாளை கன்னடர் தமிழர் பிரச்சினை நடந்தால் யார் பொறுப்பு. அவர்களுடைய சுய லாபத்திற்காக தமிழர்களை அச்சுறுத்தும் படி பேசியுள்ளார். இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை நிறுத்தி கொள்ளவேண்டும்.

பகடை காயாக்க வேண்டாம்
கன்னட ஊடகங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சிலர் கர்நாடகத்தில் தமிழில் பேசிவிட்டார். கன்னடர்களுக்கு எதிராக தமிழர்களை தூண்டிவிட்டார் என மிகைப்படுத்தி பேசிவருகின்றனர். உங்களுடைய அரசியல் பசிக்கு தமிழர்களை பகடை காயாக பயன்படுத்த வேண்டாம். நாடாளுமன்ற உறுப்பினர் டிகே சுரேஷ் கூட தமிழர் கன்னடர் பிரச்சினை என்று திரித்து கூறுகிறார். தயவுசெய்து தமிழர்களை நோகடிக்கும் படி அரசியல் செய்ய வேண்டாம்.

உங்களுக்காக உழைக்கும் தமிழர்கள்
உங்களுடைய காங்கிரஸ் கட்சியில் அதிக அளவில் ஏழைத் தமிழர்கள் உள்ளனர். உங்களுக்காக உழைக்கிறார்கள்.
அவர்களை இழிவுபடுத்தி அரசியல் செய்யாதீர்கள். பாஜக எதிர்ப்பு அரசியல் செய்யவேண்டுமென்றால் மக்கள் பிரச்சினைகளை பேசி அரசியல் செய்யுங்கள். பொதுவாகவே அரசியல் மேடைகளில் ஐந்தாண்டு காலம் மக்களை எட்டிப் பார்க்காதவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்தால் விரட்டி அடியுங்கள் என்று அனைத்து கட்சி தலைவர்களும் பேசிய வரலாறு இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல.

சோசியல் மீடியா கண்காணிப்பு
இந்த அரசியல் மேடைப்பேச்சை மிகைப்படுத்தி தமிழர்களை இழுத்து விடும் வேலையை காங்கிரஸ் வேட்பாளர் குசுமா செய்து வருகிறார். இதுபோன்ற அரசியல் செய்தால் நம் சகோதரர்கள் கன்னடர்களே தோற்கடித்து விடுவார்கள். அந்தக்காலம் மலையேறி போய்விட்டது. சமூக ஆர்வலர்களும், நேர்மையான சோசியல் மீடியாக்களும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்து கட்சிகளிலும் இருக்கும் தமிழர்கள் மாட்டை போன்று உழைப்பை கொடுத்துவிட்டு, தனக்கான அரசியல் அங்கீகாரத்தை பெறாமல்கூலிக்கு மாராடிக்கும் வேலையை விடவேண்டும். தமிழர்களுக்கான அரசியல் அங்கீகாரம் கிடைக்காதவரை இப்படித்தான் நம்மை ஏய்ப்பார்கள்'' என காட்டமாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications