பெங்களூரை புரட்டி போட்ட கனமழை.. படகு மூலம் மீட்பு பணிகள்! பல இடங்களில் மிக மோசமான டிராபிக் பாதிப்பு
பெங்களூர்: பெங்களூரில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கிய நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலைமை மோசமாக இருக்கும் நிலையில், படகு மூலம் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
கடந்த மூன்று நாட்களாகவே பெங்களூரில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கொட்டிய மழை: இந்தச் சூழலில் நேற்றிரவு திடீரென நகரின் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பாதிப்புகள் மேலும் மோசமடைந்தது. பல தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கிய நிலையில், சாலைகள் குளம் போல மாறியது. இதனால் காலையில் பொதுமக்கள் அலுவலகம் செல்லவே பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
நேற்றிரவு பெங்களூரில் பல பகுதிகளில், குறிப்பாக நகரின் வடக்கு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கியது. சில இடங்களில் வாகனங்களே செல்ல முடியாத அளவுக்குக் கூட நீர் சூழ்ந்தது. கோகிலு சந்திப்பு உள்ளிட்ட பல சாலைகளில் படகு மூலம் மீட்புப் பணிகள் நடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
லீவ்: மழை பாதிப்பு மோசமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பெங்களூரில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அளித்து பெங்களூரு நகர்ப்புற துணை ஆணையர் ஜெகதீஷ் உத்தரவிட்டார். கனமழை காரணமாகக் கடந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் இரண்டாவது முறையாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலையும் வெள்ள பாதிப்பு சரியாகாத நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த கனமழையால் பெங்களூர் விமான சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. மேலும் பல விமானங்கள் திசைதிருப்பப்பட்டன. டெல்லியில் இருந்து வந்த ஒரு ஏர் இந்தியா விமானமும், நான்கு இண்டிகோ விமானங்களும் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டன.

பாதிப்பு: மேலும், முக்கிய சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சில்க் போர்டு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகள் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்குப் போக்குவரத்தும் முழுமையாக முடங்கியுள்ளது. யலஹங்கா மற்றும் சககர் நகர் உள்ளிட்ட பகுதிகள் மொத்தமாக நீரில் மூழ்கியுள்ள படங்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
Service road from kogilu junction towards IAF is closed to enable rescue pic.twitter.com/eGb1j05D31
— ACP Traffic Northeast Pradeep (@acpnortheasttr) October 22, 2024
யலஹங்கா பகுதியில் உள்ள கோகிலு சந்திப்பில் இந்திய விமான தளம் ஒன்று உள்ளது. கோகிலு சந்திப்பு முதல் விமானப்படைத் தளம் வரையிலான சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் அந்த சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ரப்பர் படகுகள் மூலம் அந்த பகுதியைக் கடந்து செல்கிறார்கள். மேலும், சககர் நகரில் நிலைமை மோசமாக இருக்கிறது. பல பகுதிகளில் கார்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. இது தொடர்பான படங்களும் இணையத்தில் பரவி வருகிறது.

மழை தொடரும்: பெங்களூரை பொறுத்தவரை இன்றும் கனமழை தொடரும் என்றே வானிலை மையம் எச்சரித்துள்ளது. பெங்களூர் நகரம் மற்றும் ரூரல் மாவட்டங்களுக்கு வானிலை மையம் இன்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இடியுடன் கூடிய கனமழை அங்குக் கொட்டும் என்று அஞ்சப்படுகிறது. கனமழை தொடரும் என்பதால் பெங்களூர் மாநகராட்சியும் பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கனமழை இருக்கும் என்பதால் ஜன்னல்களை மூடி, வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முடிந்தவரைத் தேவையற்ற பயணத்தைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் கூறுகையில், "பெங்களூரை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் காலை இடியுடன் கூடிய மழை என்பது அரிதான ஒன்று. மேற்கு பெங்களூரின் சில பகுதிகளில் 60 மிமீ வரை மழைப் பதிவாகியுள்ளது" என்றார். மேலும், மழை மேகங்கள் சற்று பலவீனமடைகிறது என்ற போதிலும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications