வீடுகள் இடிப்பு.. சிலைகள் அமைப்பு! பேசாவிட்டால் நாட்டையும் அழித்துவிடுவார்கள் - நடிகர் பிரகாஷ் ராஜ்
பெங்களூரு: வீடுகளை இடித்துவிட்டு சிலைகள் கட்டப்படுவதாகவும், இப்போது மக்கள் பேசாவிட்டால் விரைவில் நம் நாட்டையே அழித்துவிடுவார்கள் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜஹாங்கிர்புரியில் அனுமன் சேனா ஊர்வலம் சென்ற இந்துத்துவ அமைப்பினர் அவ்வழியே உள்ள மசூதி அருகே தகராறில் ஈடுபட்டதால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது.
இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் மீதும் அப்பகுதி இஸ்லாமியர்கள் மீதும் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

உச்சநீதிமன்ற உத்தரவை மீது வீடுகள் இடிப்பு
இதனிடையே ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாக கூறி அவற்றை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. அதன்பேரில் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தை போல் புல்டோசரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கட்டிடங்களை இடிக்க இடைக்கால தடை விதித்தது. ஆனால், நீதிமன்ற ஆணை தங்களுக்கு கிடைக்கவில்லை எனக்கூறி அதிகாரிகள் ஏராளமான வீடுகளை இடித்துத் தள்ளினர்.

அதிரவைத்த புகைப்படங்கள்
வீடுகள், கடைகளை இழந்து இடிபாடுகளில் கண்ணீருடன் பொருட்களை சேகரிக்கும் மக்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டங்களை பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இஸ்லாமியர்களை தொடர்புபடுத்துகிறீர்கள்
அப்போது ஆஜரான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஜஹாங்கிர்புரியில் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிப்பதற்கு எதிராக வாதிட்டார். அப்போது பேசிய அவர், "ஆக்கிரமிப்புகள் தவறுதான். ஆனால், இங்கு நடப்பது என்னவென்றால், ஆக்கிரப்புகளை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள்." என்றார்.

உத்தரப்பிரதேச மாடல்
உத்தரப்பிரதேசத்தில் 5 மாநில தேர்தல்களுக்கு முன்பாகவே அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், சிறுபாண்மையினர்கள் என பலரது வீடுகளை புல்டோசர்களை கொண்டு அம்மாநில அரசு இடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2 வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் அதை மேலும் தீவிரப்படுத்தியது. இதேபோல் மத்திய பிரதேசத்திலும் ராமநவமி ஊர்வலத்தின்போது கலவரம் வெடித்ததை தொடர்ந்து இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளை அம்மாநில அரசு புல்டோசர்களை கொண்டு இடித்து நொறுக்கியது.

பிரகாஷ் ராஜ் கருத்து
இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ், "சிலைகள் கட்டப்படுகின்றன.. வீடுகள் இடிக்கப்படுகின்றன.. மக்கள் பேசாவிட்டால் கூடிய விரைவில் நாட்டையும் அவர்கள் அழித்துவிடுவார்கள்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications