"அடுத்தடுத்து சர்ச்சைகள்!" பெரும் சிக்கலில் பசவராஜ் பொம்மை! ஓராண்டிற்குள் மீண்டும் முதல்வர் மாற்றம்?
பெங்களூர்: அண்டை மாநிலமான கர்நாடகாவில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தொடர்ச்சியாகக் கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து பரபர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. முதலில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான நிலையில், அதைத் தொடர்ந்து ஹலால் இறைச்சி எனத் தொடர் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதனிடையே அடுத்த ஆண்டு அங்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குத் தேவையான நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன. குறிப்பாக, ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது.

கர்நாடகா
கர்நாடகாவில் முதல்வராக இருந்த எடியூரப்பா நீக்கப்பட்டு, 9 மாதங்களுக்கு முன்பு தான் பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வராகக் கொண்டு வரப்பட்டார். இதனிடையே பசவராஜ் பொம்மை ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால் அவரை வைத்துக் கொண்டு தேர்தலைச் சந்திப்பது சரியாக இருக்குமா என்ற ஆலோசனையில் இறங்கி உள்ளது பாஜக தலைமை! இதனால் தேர்தலுக்கு முன்னரே அவர் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மாற்றங்கள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பெங்களூர் வந்துள்ளது இதுபோன்ற ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. கர்நாடக அமைச்சரவையில் வெகு விரைவில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதியில் கூட இந்த மாற்றங்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகம் என்று கர்நாடக பாஜக தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தேவைப்பட்டால் மாநிலத் தலைமைகளில் மொத்தமாகக் கூட மாற்றங்களைச் செயல்படுத்த பாஜக தலைமைக்குத் தைரியமும் வலிமையும் உள்ளது என்று அக்கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

பி.எல். சந்தோஷ்
இது தொடர்பாக பி.எல். சந்தோஷ் மேலும் கூறுகையில், "இது போன்ற மாற்றங்கள் அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் என்று நான் கூறவில்லை, ஆனால் மற்ற அரசியல் கட்சிகளால் கூட நினைத்துப் பார்க்க முடியாத முடிவுகளை பாஜகவால் எடுக்க முடிகிறது. கட்சி நிர்வாகிகள் மீதுள்ள நம்பிக்கையால் இந்த முடிவுகள் சாத்தியமாகியுள்ளன, குஜராத்தில், முதல்வர் உட்பட ஒட்டுமொத்த அமைச்சரவையும் மாற்றப்பட்டது. புகாரின் அடிப்படையில் மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. ஒரு புதுமையைப் புகுத்தவே இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வந்தோம்.

தவிர்க்க முடியாது
அரசியலில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாது. ஒரு கட்சி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருவது எளிதான காரியம் அல்ல. ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை அதிகமாகிறது" என்றார். எடியூரப்பாவுக்குப் பதிலாக பசவராஜ் பொம்மை கொண்டுவரப்பட்டு ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில், இப்போது மீண்டும் ஒரு மாற்றத்திற்குக் கர்நாடக தயாராகி வருகிறது. பி.எல். சந்தோஷின் இந்த கருத்திற்கு மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

மறுப்பு
அடுத்த இரண்டு வாரங்களில் கர்நாடக அரசியலில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரம் அமைச்சராக வேண்டும் என்ற விருப்பதித்லி இருக்கும் சில பாஜக தலைவர்கள் இதுபோன்ற தகவல்களைத் திட்டமிட்டு பரப்புவதாக முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, அங்கு அரசியல் குழப்பம் இருக்கும் நிலையில், இந்தச் சூழலில் பசவராஜ் பொம்மையை மாற்றுவது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பது அவரது ஆதரவாளர்களின் கருத்து.

குஜராத்
அதேநேரம் குஜராத் மாநிலத்தில் நடந்ததை போல கர்நாடகாவிலும் அமைச்சரவை முழுவதுமாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் கர்நாடகாவும் குஜராத்தும் ஒன்றல்ல என்பதையும் பாஜக தலைமை புரிந்தே உள்ளது. இப்போது பாஜக சார்பில் எம்எல்ஏக்களாக உள்ள பலரும் காங்கிரஸ் அல்லது ஜேடியூ சார்பில் வென்றனவர்கல். எனவே, அதிரடி மாற்றம் என்பது மோசமான விளைவையும் கூட ஏற்படுத்தலாம் என்பதைத் தேசிய தலைமை உணர்ந்தே உள்ளது.

சிக்கல்
பசவராஜ் பொம்மை அரசு சில வாரங்களாகவே தற்காப்பு மனநிலையிலேயே உள்ளது. ஹிஜாப் விவகாரம், ஹலால் இறைச்சி போன்ற சிக்கல்கள் அங்குத் தொடர்கிறது. இதையெல்லாம் விட காண்டிராக்டர் தற்கொலை அங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவர் கடைசியாகத் தனது ஊடக நண்பர்களுக்கு அனுப்பிய மெசேஜில் அமைச்சரைக் குற்றஞ்சாட்டி இருந்தார். இது பசவராஜ் பொம்மை அரசின் இமேஜை கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே, வரும் நாட்களில் எதிர்பாராத மாற்றங்கள் வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.












Click it and Unblock the Notifications