சித்தராமையா அரசுக்கு ஆபத்து? கர்நாடகா காங்கிரஸில் வெடிக்கும் குழப்பம்! சமாளிக்க நேரடியாக அவரே வராராம்
பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது. இருப்பினும், இப்போது சொந்த கட்சி எம்எல்ஏக்களே சித்தராமையா அரசு மீது விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் எங்கு சித்தராமையா அரசுக்கே ஆபத்து ஏற்படுமோ என்றும் கூட பேச்சுகள் எழுந்துள்ளது. இந்தச் சூழலில் தான் டெல்லி தலைமை நேரடியாக இதில் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரப் பார்க்கிறது.
கர்நாடகாவில் இப்போது ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அங்குச் சொந்த கட்சி எம்எல்ஏக்களே காங்கிரஸ் அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இது கர்நாடக காங்கிரஸ் அரசின் இமேஜை கடுமையாக டேமேஜ் செய்வதாக இருக்கிறது. நிலைமை மெல்ல கை மீறிச் செல்வதை உணர்ந்த காங்கிரஸ் தலைமை நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளது.

ரந்தீப் சிங் சுர்ஜேவாலா
இதற்காகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா நாளை பெங்களூர் வருகிறார். பெங்களூரிலேயே அவர் இரு நாட்கள் தங்கியிருந்து அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசவிருக்கிறார்.
முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில் தான் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேரடியாகவே அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து பேசினர். இதற்கிடையே இப்போது அடுத்தகட்டமாக சுர்ஜேவாலாவும் பெங்களூர் வருகிறார்.
கர்நாடக காங்கிரஸில் சலசலப்பு
சமீப காலங்களில் சில கர்நாடக எம்.எல்.ஏக்கள் தங்கள் சொந்த கட்சியின் அரசு மீதே பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர். பி.ஆர்.பாட்டில் வீட்டுவசதி துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகச் சாடியிருந்தார். எம்.எல்.ஏ ராஜு கேஜ் கர்நாடக அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகக் கூறியிருந்தார். இது கர்நாடக அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதைச் சமாளிக்கும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது.
சுர்ஜேவாலா தனது பயணத்தின்போது, காங்கிரஸ் தலைவர்கள் சிலரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச உள்ளார். மேலும், கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படலாம் என்றும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இதுபோல காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் சுர்ஜேவாலா கண்டிப்பாக அறிவுறுத்த வாய்ப்புள்ளது.
விமர்சனங்கள்
சமீபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் என்பவர் மாநிலத்தில் தலைமை மாற்றம் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். இது குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் கூறுகையில், "சரியான நேரம் வரும்போது, டி.கே.சிவக்குமாருக்கு டெல்லி தலைமை வாய்ப்பு வழங்கும். இந்த ஆண்டே கூட அது நடக்க வாய்ப்புள்ளது. பெரிய அரசியல் மாற்றம் வரும் என சில தலைவர்கள் மறைமுகமாகப் பேசுகிறார்கள். நான் எதையும் மறைக்காமல் நேரடியாகச் சொல்கிறேன், இரண்டு மூன்று மாதங்களில் ஒரு மாற்றம் வரும்" என்று அவர் கூறியிருந்தார்.
இதுபோல தலைமை மாற்றம், ஊழல் குற்றச்சாட்டுகள் எனக் காங்கிரஸ் எம்எல்ஏக்களே பேசுவது காங்கிரஸ் அரசுக்குத் தர்மசங்கடத்தையே ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான் நேரடியாக ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கர்நாடகாவுக்கே வந்து மோதலை முடிவுக்குக் கொண்டு வரப் பார்க்கிறார். தலைமை குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்று ரந்தீப் சிங் சுர்ஜேவாலா அறிவுறுத்தவுள்ளார்.
கர்நாடக அரசு
கர்நாடக அரசியலில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் அதிருப்தி அவ்வப்போது பொதுவெளிக்கும் வந்துவிடுகிறது. குறிப்பாக, முதல்வர் பதவிக்கு டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி நிலவுவதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சொந்த கட்சியினரே அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது கட்சிக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனைச் சரி செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டுள்ளது.
காங்கிரஸ் மேலிடம் கர்நாடகாவில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், உட்கட்சி பூசலை தீர்க்கவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவின் இந்த வருகை, கட்சியின் உள் விவகாரங்களைச் சரிசெய்வதற்கும், தலைவர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications