சிறைக்கு தள்ளப்படும் Byjus ரவீந்திரன்.. பெங்களூரை கலக்கிய Byju's நிறுவனருக்கு கெட்ட காலம்!
பெங்களூர்: இந்திய ஸ்டார்ட்அப் துறையில் முக்கிய பிரிவாக இருந்த EdTech துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்கிய 'பைஜூஸ்' (Byju's) நிறுவனத்தின் நிறுவனர் பைஜூ ரவீந்திரனுக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பைஜூ ரவீந்திரன் ஏற்கனவே பெரும் நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இவருக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் செய்தி, தற்போது கார்ப்பரேட் உலகில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய பைஜூ ரவீந்திரன்
சிங்கப்பூர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை பைஜூ ரவீந்திரன் தொடர்ந்து மீறியதே இந்தச் சிறை தண்டனைக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், அவருடைய சொத்துக்கள் தொடர்பான பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மதிக்காமல் செயல்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சட்ட விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட காரணத்திற்காகவே இந்த கடுமையான அவமதிப்பு நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் கெடு
சிங்கப்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பைஜூ ரவீந்திரன் உடனடியாக அங்குள்ள சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கிற்கான நீதிமன்றச் செலவுத் தொகையான 70,500 டாலரை (சுமார் 58 லட்சம் ரூபாய்) அவர் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுமட்டுமன்றி, 'பீயார் இன்வெஸ்ட்கோ பிரைவேட் லிமிடெட்' (Beeaar Investco Pte) என்ற நிறுவனத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர் அவர்தான் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், பைஜூஸ் நிறுவனத்தின் மற்றொரு தொடர்புடைய அமைப்பின் பங்குகளைத் தன் வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் சரிவில் பைஜூ ரவீந்திரன்
ஒரு காலத்தில் இந்தியாவின் மிக வெற்றிகரமான தொழிலதிபராகக் கொண்டாடப்பட்ட பைஜூ ரவீந்திரனுக்கு, இந்தச் சிறை தண்டனை மிக முக்கியப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவர் ஏற்கனவே பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் கடுமையான சட்டப் போராட்டங்களைச் சந்தித்து வருகிறார்.
குறிப்பாக, அமெரிக்காவில் பைஜுஸ் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் தொடுத்த வழக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. பைஜூஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 1.2 பில்லியன் டாலர் (சுமார் 10,000 கோடி ரூபாய்) கடனைத் திரும்பப் பெறுவதற்காகப் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், சிங்கப்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
தற்போதைய நிலை என்ன?
இந்த அதிரடி தீர்ப்பு குறித்து பைஜூ ரவீந்திரன் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அல்லது கருத்துகளும் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், அவர் தற்போது சிங்கப்பூரில் இருக்கிறாரா அல்லது உலகின் வேறு ஏதேனும் ஒரு நாட்டில் இருக்கிறாரா என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்தியாவின் ஸ்டார்ட்அப் (Startup) உலகில் கொடிகட்டிப் பறந்த ஒரு நிறுவனத்தின் நிறுவனர், அடுத்தடுத்து சர்வதேசச் சட்டச் சிக்கல்களில் சிக்கி வருவது ஒட்டுமொத்த வர்த்தக உலகையும் உற்றுநோக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications