பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு.. “மத” ரீதியில் வாக்கு சேகரித்த புகாரில் ஆக்ஷன்!
பெங்களூர்: பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதையடுத்து இன்று 2வது கட்டமாக லோக்சபா தேர்தல், கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் இன்று 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த 24ஆம் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் அங்கு நிறைவு பெற்றது. பெங்களூர் தெற்கு தொகுதியில் பாஜகவின் சிட்டிங் எம்.பி தேஜஸ்வி சூர்யா, காங்கிரஸ் சார்பில் சவுமியா ரெட்டி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
1977ஆம் ஆண்டு பெங்களூர் தெற்கு தொகுதி உருவானது முதல் தற்போது வரை காங்கிரஸ் ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 8 முறை பாஜக வென்று பெங்களூர் தெற்கு தொகுதியை தமது கோட்டையாக மாற்றி வைத்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் 3.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி சூர்யா வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில், இன்று அங்கு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும், எம்.பியுமான தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்த்ல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், ஜெயநகர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக ஆதரவாளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இன்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் தேஜஸ்வி சூர்யா. அதில் பேசிய தேஜஸ்வி சூர்யா, "80% பாஜக ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால் வாக்குப்பதிவு நாளில் நம்மில் 20% பேர் தான் வெளியே வந்து வாக்களிக்கிறோம். காங்கிரஸ் ஆதரவாளர்கள் 20%, அவர்கள் வெளியே வந்து 80% வாக்களிக்கிறார்கள்" என்று பேசி இருந்தார்.
முன்னதாக, பாஜகவுக்கு வாக்கு சேகரிக்குமாறு கேட்டுக்கொண்டு தனது சமூக வலைதள பக்கங்களில் பல்வேறு செய்திகளையும் பதிவிட்டிருந்தார் பாஜக எம்.பியும், பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளருமான தேஜஸ்வி சூர்யா. அதில் மத ரீதியில் சில விஷயங்களை குறிப்பிட்டும் இருந்தார்.
பெங்களூர் தெற்கு தொகுதி வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா, மத ரீதியாக வாக்கு சேகரித்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மற்றொரு பாஜக வேட்பாளர் சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications